கோண்ட் கதிரா (Gond Katira) என்பது மத்தியக் கிழக்கு நாடுகளில் காணப்படும் தாவரங்களின் சாற்றில் இருந்து கிடைக்கும் ஒரு இயற்கை பசையாகும். இது தண்ணீரில் கரைக்கப்படும்போது ஜெல்லி வடிவமாக மாறுகிறது. திடமான படிகங்களாக தோன்றுகிறது. இது கோடையில் உடலை குளிர்விக்கவும் குளிர்காலத்தில் இதமான வெப்பமாகவும் வைக்கிறது.
இது பாரம்பரிய மருத்துவம், உணவு மற்றும் அழகு சாதன பொருட்களில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
கோண்ட் கதிராவின் ஆரோக்கிய நன்மைகள்:
1. ஊட்டச்சத்து மதிப்பு: கோண்ட் கதிராவில் பாலி சாக்கரைடுகள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் நிரம்பியுள்ளன. இது உணவு நார்ச்சத்துக்களுக்கான சிறந்த மூலமாகவும் ஆரோக்கியமான செரிமானத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
2. உடல் எடையை குறைக்கும்: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கோண்ட் கதிராவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை சாப்பாட்டிற்கு முன்பு உண்ண வேண்டும். இது பசியை குறைக்கும். குறைவாக சாப்பிட வைக்கும். எனவே, எடை இழப்புக்கு சிறந்தது.
3. எலும்புகளை பலப்படுத்தும்: இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், வலுவான எலும்புகளுக்கு காரணமாகின்றன. இதை தவறாமல் உட்கொள்ளும்போது எலும்புகளை வலுவாக வைத்திருக்கும். ஆற்றலுடன் செயல்பட வைக்கும். எலும்பு நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
4. சுவாச ஆரோக்கியம்: இது சுவாச ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ஒரு இயற்கையான எக்ஸ்பெக்டரண்டாக செயல்படுகிறது. அதாவது சளியை அழிக்க உதவுகிறது. இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லது.
5. நோய் எதிர்ப்பு சக்தி: இதில் உள்ள இயற்கையான பாலி சாக்கரைடுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதை தவறாமல் உட்கொள்வதன் மூலம் உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காக்கவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு வலியைக் குறைக்கும்.
6. கல்லீரல் ஆரோக்கியம்: சிறந்த கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது கோண்ட் கதிரா. இதில் உள்ள இயற்கையான சேர்மங்கள் கல்லீரலை நச்சுத்தன்மையிலிருந்து காக்க உதவுகின்றன. ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
7. சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம்: கோண்ட் கதிரா தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைக்கிறது . உடல் சுருக்கங்கள் மற்றும் கோடுகளைக் குறைக்க உதவுகிறது. இதை அடிக்கடி உட்கொள்ளும்போது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது. இதில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்களுக்கு ஊட்டம் தர உதவுகின்றன. பொடுகுத் தொல்லையை நீக்குகின்றன.
கோண்ட் கதிராவைப் பயன்படுத்தும் விதம்: கோண்ட் கதிராவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எலுமிச்சை பழம் ஜூஸ் மில்க் ஷேக் போன்ற ஏதாவது ஒரு குளிர்பானத்தில் சேர்க்கவும். இதை பாலுடனும் கலந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும், இனிப்புகள் புட்டிங் மற்றும் ஜல்லிகள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.