சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து சீனாவில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால், அதை பற்றித் தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் சீனாவில் பரவி வரும் HMPV Metapneumo வைரஸ் ஆபத்து விளைவிக்கக்கூடியதா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ், கொரோனா வைரஸ் போன்று புதிதாக உருவான வைரஸ் கிடையாது. இது காலம் காலமாக நமக்கு சளி, இருமல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் பழைய வைரஸ்தான் என்று சொல்லப்படுகிறது.
நமக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளை பொதுவாக ஏற்படுத்தத்கூடிய வைரஸ் adenovirus, Metapneumovirus, Rhinovirus, Influenza virus ஆகியவையாகும். இவை அனைத்துமே சளி, காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள்தான். Adeno virus 'மெட்ராஸ் ஐ' என்று சொல்லக்கூடிய கண் சம்பந்தமான பிரச்னையை ஏற்படுத்தும் வைரஸ்.
Rhino virus என்பது சளி ஒழுகுதல், தும்மல், இருமல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் வைரஸ். Metapneumo virus என்பது சளி, காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் ஆகும். இது பொதுவாக குழந்தைகளையும், வயதானவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையும் அதிகமாகத் தாக்கும். குழந்தைகளுக்கு ஒருபடி அதிகமாக போய் வீசிங் பிரச்னை, ஆக்சிஜன் தேவைப்படுவது, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் வரலாம்.
பல சமயங்களில் இந்த Metapneumovirus உடன் Pneumococcus என்று சொல்லக்கூடிய பாக்டீரியா நிமோனியா ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கென்று தனியாக சிகிச்சை தேவையில்லை. பாக்டீரியா நோய்தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டி பயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, இந்த Metapneumovirus வைரஸை கண்டு அச்சப்பட தேவையில்லை. இது ஏற்கெனவே இங்கு இருக்கக்கூடிய சாதாரண வைரஸே ஆகும். சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் அதிகமாக இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. இது சாதாரணமாக வரக்கூடிய வைரஸே தவிர கொரோனா போன்ற நோய்த்தொற்று கிடையாது. ஆகவே, இந்த வைரஸால் எந்த ஆபத்தும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.