
நாம் தினமும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக தான் நம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. அதனால் தான் நாம் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடிகிறது. எப்போதுமே பசி எடுத்த பிறகு உணவை எடுத்துக் கொள்வது சிறந்தது. உணவு எடுத்துக் கொள்வதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று உண்மையிலேயே பசி எடுத்த பிறகு சாப்பிடுவது. இன்னொன்று போலி பசி. அதாவது நம்முடைய சுற்றுப்புறச் சூழ்நிலை, நம்முடைய உணர்வு இவற்றை வைத்து நமக்கு வரும் பசியைத் தான் 'போலி பசி' என்று சொல்கிறோம்.
போலி பசி ஏற்படுகிறது என்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?
போலி பசி என்பது உண்மையிலேயே பசி எடுத்து உணவை சாப்பிட வேண்டும் என்று ஏற்படும் உணர்வுக் கிடையாது. படம் பார்க்கும் போது உணவு சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது, இரவு நேரங்களில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது, கோபமாக அல்லது சோகமாக இருக்கும் போது சாப்பிடுவது போன்றவை போலி பசியாகும். இது அந்த சூழ்நிலை காரணமாக ஏற்படும் பசியாகும்.
உண்மையாக பசி எடுக்கும் போது வயிற்றில் சத்தம் கேட்பது, உடலில் எனர்ஜி குறைவது, வயிறு காலியாக இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதை வைத்து உண்மையான பசியை கண்டறியலாம்.
போலி பசி ஏற்படும் போது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு மட்டுமே இருக்குமே தவிர பசி இருக்காது. மேலும் போலி பசி ஏற்படும் போது இனிப்பு, எண்ணெய் உணவுகள், உப்பு அதிகமாக இருக்கும் ஸ்நாக்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே எடுத்துக் கொள்ள தூண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
போலி பசி ஏற்படுவதற்கான காரணங்கள்,
1. ஸ்ட்ரெஸ் மற்றும் எமோஷன், பதற்றம், மகிழ்ச்சி, சோகமாக இருக்கும் சமயங்களில் சாப்பிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் குறிப்பாக அதிக இனிப்பு, கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள விரும்புவோம்.
2. சலிப்பு ஏற்படும் போது அதிகமாக சாப்பிட தோன்றும். முக்கியமாக டீ.வி பார்க்கும் போது, போன் பார்க்கும் போது சாப்பிட்டுக் கொண்டே பார்ப்போம். சாப்பிட வேண்டிய தேவையில்லை என்றாலுமே சாப்பிட தோன்றும்.
3. தண்ணீர் குடிக்காமல் Dehydration ஆவதும் இதற்கான காரணமாகும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மூளை கொடுக்கும் சிக்னலை பசி என்று எடுத்துக் கொண்டு உடனே சாப்பிட தொடங்கி விடுவோம். இதை தடுக்க முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை குடிப்பது பசியினை போக்கும்.
4. சரியான தூக்கம் இல்லாதது, ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது நார்ச்சத்து, புரதம் போன்றவற்றின் குறைப்பாடு பசி உணர்வை தூண்டும். சர்க்கரை வியாதி, தைராய்ட் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஏற்படும்.
இதை சரி செய்ய முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து பசி மட்டுப்படுகிறதா? என்பதை கவனிக்கவும். சாப்பிடுவதற்கு முன்பு நமக்கு வந்திருப்பது போலி பசியா அல்லது நிஜப்பசியா? என்பதை தெரிந்துக் கொண்டு சாப்பிடுங்கள். கண்டிப்பாக உணவில் நார்ச்சத்து மட்டும் புரதம் போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)