ரொட்டிப் பழத்தில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ரொட்டிப் பழம்
Bread fruit

ரொட்டிப் பழம் (Bread fruit) பார்ப்பதற்கு  பலா பழத்தை போல இருக்கும். முதலில் பச்சை நிறமாக இருக்கும். பழுத்த பின் மஞ்சள் நிறமாக மாறும். இதில் உள்ள சதைப்பகுதி கிரீம் போல மிகவும் மென்மையானது. மாவுச்சத்துக் கொண்டது. இது அரிசி அல்லது ஒரு உருளைக்கிழங்குக்கு மாற்றான உணவாக  இருக்கும். புளிப்பான வாழைப்பழத்தின் சுவையை ஒத்திருக்கும். இதை பச்சையாகவும் உண்ணலாம். சமைத்தும் சாப்பிடலாம். ஃபிரெஞ்சு ஃபிரைஸ் போல இவற்றையும் ஃபிரை செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ரொட்டிப் பழத்தில் உள்ள சத்துக்கள்: இதில் ஊட்டச்சத்துக்களும் மருத்துவ பண்புகளும் அடங்கி உள்ளன. அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளிட்ட புரதங்கள், விட்டமின் சி, பி1, பி5 மற்றும் பொட்டாசியம் மற்றும் தாமிரம் ஆகிய தாதுக்கள் நிரம்பியுள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொழுப்பின் அளவை குறைக்கும். சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரொட்டிப் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை விரிவுபடுத்தவும், இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எலும்புகளின் அமைப்பை பலப்படுத்தி, தசை சுருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் இதயம் ஆரோக்கியமாக செயல்பட ஏதுவாக அமைகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது: நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழம் இது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிரம்பி இருப்பதால் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடல் கலோரிகள் உட்கொள்வதை குறைக்கிறது. அதனால் அவர்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது.

செரிமான மேம்பாடு: இந்தப் பழத்தில் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் குடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் குடல் இயக்கங்களை சீர்படுத்தவும் உதவுகிறது. அமிலத்தன்மை, அல்சர், நெஞ்செரிச்சல், அஜீரணம், இரப்பை அழற்சி போன்ற குடல் தொடர்பான பிரச்னைகளை தடுக்கிறது. நல்ல பாக்டீரியாக்களுக்கு தீனி அளிக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை தடுப்பதன் மூலம் பெருங்குடலின் சளி சவ்வையும் பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
தூக்கத்திலும் கொழுப்பை சேர்க்கும் கெட்ட பழக்கங்கள்… ப்ளீஸ் வேண்டாமே! 
ரொட்டிப் பழம்

இளமைத் தோற்றத்தை தக்கவைக்கும்: இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல இளமையும் அழகும் பளபளப்பும் உறுதி. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. சருமத்தை மிகவும் அழகாக வைப்பதுடன் புதிய சரும செல்களை மீண்டும் உருவாக்குகிறது. சருமத்தில் உண்டாகும் அழற்சி, தடிப்புகள் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: நோய் தொற்றை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிராக இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் செயல்படுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

எலும்பு ஆரோக்கியம்: இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க பங்களிக்கிறது. எலும்புகளின் அடர்த்தி மற்றும் ஒட்டுமொத்த எலும்புகளின் நல்வாழ்வுக்கு துணை புரிகிறது.

பார்வைத் திறன் மேம்பாடு: இதிலுள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறது. நல்ல கண் பார்வையை வழங்குகிறது.

ஆற்றல் அதிகரிப்பு: இது நல்ல கார்போஹைட்ரேடுகளின் ஆதாரமாக இருப்பதால் உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்குகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக பணிகளை செய்ய உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com