அதிகளவு காய்கறிகளை உணவுடன் சேர்த்து உண்பது, இதயம் உள்பட உடலின் மொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை தரும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஐந்து வகைக் காய்கறிகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ஸ்ட்ரோக் வரும் அபாயத்தைத் தடுக்க வல்லவை. அவை எவை என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வைட்டமின் A, K, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்கள் மற்றும் டயட்டரி நைட்ரேட்ஸ் அதிகம் நிறைந்துள்ள பசலைக் கீரை, காலே போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உண்பதால் அவை இரத்தக் குழாய்களை தளர்வுறச் செய்து இரத்த ஓட்டம் சிரமமின்றிப் பாய உதவி செய்கின்றன.
புரோகோலியில் வைட்டமின் C உள்பட பல வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள சல்ஃபோரஃபேன் (Sulforaphane) என்ற கூட்டுப் பொருளானது உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளின் அளவையும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
கேரட்டில் பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் செல்களில் ஏற்படும் சிதைவுகளைத் தடுத்து செல்களைக் காப்பாற்ற உதவுகிறது. கேரட்டை தொடர்ந்து உட்கொள்ளும்போது ஸ்ட்ரோக் உண்டாகும் அபாயம் குறைகிறது.
தக்காளியில் லைக்கோபீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதன் காரணமாகவே தக்காளி சிவப்பு நிறம் பெற்றுள்ளது. தொடர்ந்து தக்காளி உண்டு வந்தால் இரத்தக் குழாய்கள் சுத்தமடைகின்றன; ஸ்ட்ரோக் உண்டாகும் அபாயமும் குறைகிறது.
பெல் பெப்பரில் வைட்டமின் C மற்றும் A அதிகம் உள்ளன. மேலும் பீட்டா கரோட்டின், பிளவனாய்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன. பெல் பெப்பர் உண்பதால் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது; ஸ்ட்ரோக் வரும் அபாயமும் குறைகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தினசரி உட்கொண்டு, உடலின் முக்கிய உறுப்புகளான இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காத்திடுவோம்.