ருபார்ப் காயிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ருபார்ப்
Rhubarbhttps://gardenerspath.com
Published on

ருபார்ப் (Rhubarb) என்ற, பக் வீட் (Buck Wheat) குடும்பத்தை சேர்ந்த தாவரம், ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்டது. நீளமான இதன் தண்டு அடர் சிவப்பு நிறத்தில் சதைப் பற்றுள்ளதாகவும், இலைகள் அடர் பச்சை நிறத்திலும் காணப்படும். நறுக்கிய இதன் தண்டுகளை ருபார்ப் காய் என்றே அழைக்கின்றனர். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதை உணவுடன் சேர்த்து சமைத்தும் பச்சையாகவும் உண்ணலாம். ருபார்ப் தாவரத்தின் இலைகளில் ஆக்ஸாலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் அவை விஷத்தன்மை கொண்டு உண்பதற்கு தகுதியற்றதாக உள்ளது.

புளிப்பு சுவை கொண்ட இக்காயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சமைக்கும்போது தனித்துவமான சுவை கிடைக்கிறது. நம் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஊட்டச்சத்தில் நாற்பத்தைந்து சதவிகிதம் ஒரு கப் ருபார்ப்பிலிருந்து கிடைத்து விடுகிறது. இதிலுள்ள வைட்டமின் K, நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கும், சிறப்பான செரிமானத்துக்கும், இதய ஆரோக்கியம் காக்கவும் உதவி புரிகின்றன.

இதில் காலேயில் இருப்பதைவிட அதிகளவு பினோலிக் காம்பௌண்ட் உள்ளன. இவை உடலில் வீக்கங்களைக் குறைக்கவும், ஃபிரி ரேடிக்கல்களின் அளவை சமநிலையில் வைக்கவும் உதவும். பைட்டோ கெமிக்கல்கள், உடலில் கேன்சர், டயாபெட், மன அழுத்தம், அல்ஸிமர் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவி புரிகிறது. ருபார்ப்பிலுள்ள ஆந்த்ராகுயினோன் (Anthraquinone) என்ற கெமிக்கல் நல்ல மலமிளக்கியாக செயல்புரிந்து சுலபமாக கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பிறர் மனம் நோகாமல் 'நோ' சொல்வது எப்படி?
ருபார்ப்

ருபார்ப்பிலுள்ள வைட்டமின் C திசுக்களின் வளர்ச்சிக்கும், சிதைவுற்ற திசுக்களை சரி செய்யவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நோய் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது. மாங்கனீஸ் சத்தானது உணவிலுள்ள மாவுச் சத்தை உடைத்து சக்தியாக மாற்ற உதவுகிறது. மாங்கனீஸ் வைட்டமின் K யுடன் இணைந்து, உடலில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறுகையில், இரத்தம் உறைவதற்கு உதவி புரிகிறது. வார்ஃபரின் (Warfarin) போன்ற ஆன்டி கோகுலன்ட் (anticoagulant) மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் ருபார்ப் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வைட்டமின் K எதிர்வினை புரிந்து சிக்கல் உண்டுபண்ணக் காரணமாகி விடும்.

ருபார்ப் காயை ஸ்ட்ரா பெரியுடன் சேர்த்து ஸ்ட்ராபெரி பை (Pie) செய்தால் அட்டகாசமான சுவை கிடைக்கும். மேலும் ருபார்ப்பை சட்னி, ஸ்மூத்தி, சாஸ், கேக், ஜாம் போன்ற பலவகை உணவுகளிலும் சேர்த்து சமைத்து உண்ணலாம். பாரம்பரிய சீன மருத்துவத்தில் வலி, வீக்கம், கட்டிகளை குணமாக்க பல வருடங்களாக இக்காயை உபயோகித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. ருபார்ப் காயை நாமும் உட்கொண்டு ஆரோக்கிய நன்மைகளோடு ஒரு தனித்துவ அனுபவமும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com