பெண்கள் எந்த வயதினராயினும், அவர்களுக்கிருக்கும் வேலைப் பளு, வீட்டுப் பொறுப்பு, ஆற்ற வேண்டிய கடமைகள் என எல்லாமே ஆண்களை விட சற்று கூடுதலாகவே இருக்கும். இவற்றையெல்லாம் அவர்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க அவர்களுக்குத் தேவை கூடுதல் சக்தி தரக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள். பெண்களின் உடல் மற்றும் மன வலிமைக்கு உதவக்கூடிய ஐந்து முக்கிய வைட்டமின்கள் எவை என்பதையும் அவற்றைத் தரக்கூடிய உணவுகளைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
தினசரி வேலைகளை திறம்படச் செய்து முடிக்க வைட்டமின் B12 தேவை. இச்சத்தானது துனா மீன் (Tuna), சர்டைன்ஸ், பீஃப், செரிவூட்டப்பட்ட செரியல், மாமிசம், பால் மற்றும் பால் சேர்ந்த பொருள்களில் அதிகம் உள்ளன. இவற்றை உணவுடன் சேர்த்து உண்டு தேவையான சக்தி பெறலாம்.
கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகும் பெண்களுக்கும் ஃபோலிக் ஆசிட் மிகவும் அவசியம். இதை அவர்கள் பசலைக் கீரை, முட்டைகோஸ், காலே, புரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்பிரௌட், பட்டாணி, கொண்டைக் கடலை, ஸ்பிரிங் க்ரீன் போன்றவைகளிலிருந்து பெறலாம்.
இதய நோய் வராமல் தடுக்கவும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த நாளங்களில் இரத்தம் சிரமமின்றிப் பாயவும் உதவுவது வைட்டமின் K. இது சோயா பீன்ஸ், பச்சை இலைக் காய்கறிகள், கனோலா ஆயில், ப்ளூபெரி, அத்திப் பழம், முட்டை, சீஸ், மாமிசம் ஆகியவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.
வைட்டமின் D, நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்யவும், மன வலிமை மற்றும் உடல் வலிமை பெறவும் உதவி புரியும். கொழுப்பு நிறைந்த மீன், ஃபிஷ் லிவர் ஆயில், முட்டையின் மஞ்சள் கரு, சீஸ் போன்றவற்றில் வைட்டமின் D அதிகம் உள்ளது.
மக்னீசியம் சத்துள்ள உணவுகளை வயதுக்கு வந்த பெண்கள் மற்றும் டீன் ஏஜில் உள்ளவர்கள் தங்கள் தினசரி உணவில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முழு கோதுமை, குயினோவா, பசலைக் கீரை, பாதாம், முந்திரி, டார்க் சாக்லேட் ஆகியவற்றில் மக்னீசியம் சத்து அடங்கியுள்ளது.
மேலே குறிப்பிட்ட உணவுகளை பெண்கள் தவறாமல் உட்கொண்டால், உடல் வலிமையும் மன வலிமையும் பெற்று வெற்றிநடை போட உதவுமல்லவா?