
பிரெஞ்சு ராணுவத்தில் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணராக இருந்தவர் பாரன் டொமினிக்லேரி. இவர் தான் 1792 ம் ஆண்டு முதல் முறையாக அவசரத் தேவைக்கு என ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். அப்போது குதிரை வண்டிகள் தான் பயன்படுத்தப்பட்டன. 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து மோட்டார் வாகனங்கள் ஆம்புலன்ஸ் சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டது. 1832-ல் லண்டனில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
1887-ல் செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் என்னும் நிறுவனம் லண்டனில் தொடங்கப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமான மக்கள் சேவைக்கான ஆம்புலன்சாக திகழ்ந்தது. பின்பு லண்டன் முழுவதும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்தியாவில் இந்த அமைப்பின் முலம் 1914-ம் ஆண்டு முதல் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
தற்போது அவசர மருத்துவ சேவைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவி வருகிறது. இந்த எண்ணை அழைத்தால் குறைந்தபட்சம் 9 நிமிடம் 48 நொடிகளில் ஆம்புலன்ஸ் கூப்பிட்ட இடத்திற்கு வந்து விடுகிறது. 45 நிமிடங்களுக்குள் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்கிறது. 8 கிமீ சுற்றளவில் ஒரு ஆம்புலன்ஸ் வசதி தற்போது உள்ளது.
ஆம்புலன்ஸ் சேவைக்கான பரபரப்பான நேரமாக காலை 8 மணி முதல் 11 மணி வரை, பிற்பகலில் மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் உள்ளது. சாலை விபத்து, அவசர பிரசவ வலி கேஸ்கள், மயக்கம், மூச்சுத்திணறல், கடும் காய்ச்சல், இதய தாக்குதல், காக்காய் வலிப்பு, மிருக தாக்குதல், வன்முறை தாக்குதல், தற்கொலை முயற்சி மற்றும் தீக்காயங்கள் போன்றவற்றிற்கு 108 அவசர மருத்துவ உதவி சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தியாவில் 108 அவசரகால சேவை என்பது தேவைப்படும் மக்களுக்கு போக்குவரத்து மற்றும் மருத்துவ சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் கிடைக்கிறது. மேலும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் கோர எவரும் கட்டணமில்லா எண் 108 ஐ அழைக்கலாம். அழைப்பு வரும்போது, அருகிலுள்ள கிடைக்கக்கூடிய ஆம்புலன்ஸ் அழைப்பவரின் இடத்திற்கு அனுப்பப்படும். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழு ஒரு ஓட்டுநர், ஒரு துணை மருத்துவர் மற்றும் ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் ஆகியோரைக் கொண்டுள்ளது.
இவர்களுக்கு அடிப்படை உயிர் ஆதரவை வழங்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆம்புலன்சில் டிஃபிபிரிலேட்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் முதலுதவி பெட்டி போன்ற தேவையான மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் '108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 ம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று ஆந்திரா முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியால் துவக்கப்பட்ட திட்டம்தான் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை.
2000 களின் முற்பகுதியில், போதுமான சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது நான்கு மில்லியன் இந்தியர்கள் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டது. அவசர நிலைகளை எதிர்கொள்ளும் சுமார் பத்து சதவீத மக்களுக்கு யாரை அழைக்க வேண்டும் என்று தெரியவில்லை. 2004 ஆம் ஆண்டில், அவசர மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (EMRI) ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக ஏ.பி. ரங்கா ராவ் உருவாக்கிய யோசனையின் அடிப்படையில் அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
ஆரம்பத்தில், இது சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் ராமலிங்க ராஜுவால் நிதியளிக்கப்பட்டது, ஆந்திர அரசு நிதியளிக்காத கூட்டாளியாக இருந்தது. பின்னர் GVK இண்டஸ்ட்ரீஸால் கையகப்படுத்தப்பட்டது . இந்த சேவைகள் ஆகஸ்ட் 2005 இல் 30 ஆம்புலன்ஸ்கள் கொண்ட ஒரு குழுவுடன் தொடங்கப்பட்டன. ஆகஸ்ட் 2007 இல், அரசாங்கம் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மற்றும் 95% நிதியை வழங்கியது.
அப்போது 108 என்ற எண், ராணுவத்தின் பயன்பாட்டில் இருந்ததால் நாடு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி,108 என்ற எண்ணை வாங்கி நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இந்தத் திட்டம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இது தொடங்கப்பட்டதிலிருந்து 14 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களையும், சாலை விபத்துகள் மற்றும் மாரடைப்புகளால் ஏற்படும் இறப்புகளையும் குறைப்பதில் இந்த சேவை குறிப்பாக பயனுள்ளதாக உள்ளது. இன்று தமிழகம் உட்பட 25 மாநிலங்களில் 3000 மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது.