
தெற்காசிய சமையலில் மஞ்சள் ஒரு அடிப்படையான சமையல் கூட்டுப் பொருளாக உள்ளது. மஞ்சள் அனைத்து வகையான குழம்புகளிலும் அடிப்படை மசாலாவாகவும் உள்ளது. மஞ்சளில் குர்குமின் என்கிற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேதிப் பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்பையும் , ஆக்சிஜனேற்ற பண்பையும் கொண்டுள்ளது. இதனால் ஆயுர்வேத மருத்துவ முறைகளிலும், நாட்டு வைத்திய முறைகளிலும் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது.
மஞ்சளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறியுள்ளனர். பொதுவாக இதில் உபயோகப்படுத்தும் மஞ்சள், கடையில் வாங்கும் பாக்கெட் மஞ்சளாக இல்லாமல், காய்ந்த மஞ்சள் கிழங்குகளை வாங்கி அரைத்ததாக இருந்தால் தரமாக இருக்கும் .
இந்த மஞ்சள் நீரை அப்படியே குடிக்கலாம் அல்லது விருப்பப்பட்டால் அதில் சில துளி எலுமிச்சை சாறு , கருப்பு மிளகுத்தூள் ஆகியற்றையும் சேர்த்து குடிக்கலாம். மஞ்சளில் மிளகுத்தூளை சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள குர்குமினை அதிகளவில் உறிஞ்ச உதவுகிறது. இதன் முழுப் பலனையும் பெற வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து குடிக்கலாம்.
மஞ்சளில் உள்ள குர்குமின் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் நொதிகளைத் தடுக்கிறது. மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மஞ்சள் உள்ளிருந்து உடலை சுத்தப்படுத்தும் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக் ஆகும். மஞ்சள் நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.
மஞ்சள் நீர் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. உணவு செரிமானத்தை வேகப்படுத்துகிறது. இதனால் வாயுத் தொல்லை நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபட உதவுகிறது. மஞ்சள் நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி கெட்ட கொழுப்பை குறைப்பாதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதால் கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்கிறது. சூடான எலுமிச்சை நீருடன் உட்கொள்கையில் உடலில் உள்ள தேவையற்ற சதைகளையும் குறைத்து, உடல் எடையையும் குறைக்கிறது.
மஞ்சளின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது. இது முகப்பரு மற்றும் தழும்புகளைப் போக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில் புற்று நோய்க்கு எதிராகவும் போராடுகிறது.
மஞ்சள் நீரை குடிப்பதால் நிறைய நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு மஞ்சள் ஒவ்வாமை இருந்தால், அவர்கள் இதை முயற்சிக்க வேண்டாம். உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் நீரை அருந்தும் முன் தங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)