வீட்டிலேயே கொதிக்கும் பாலில் லெமன் ஜூஸ் பிழிந்து பன்னீர் தயாரிக்கும்போது, பன்னீரை வடிகட்டி எடுத்த பின் பாலிலிருந்து பிரியும் லேசான மஞ்சள் நிறம் கொண்ட நீரையே 'வே வாட்டர்' (Whey water) அல்லது பன்னீர் வாட்டர் என்கிறோம். இந்த வே வாட்டரில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, இதை எவ்வாறு நம் உணவில் உபயோகிக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பன்னீர் வாட்டரை வீட்டில் தயாரிக்கும் சூப் போன்ற உணவுகளில் சேர்த்து சமைக்கும்போது அந்த உணவின் ஊட்டச்சத்துகளும், சுவையும், கலோரி அளவும் கூடாமல் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்தமான ஸ்மூத்தி வகைகளை தயாரிக்கும்போது வே வாட்டர் சேர்த்து செய்தால், அதில் புரோட்டீன் சத்தின் அளவு கூடும்.
சாதாரண தண்ணீருக்குப் பதில் பன்னீர் வாட்டரில் அரிசி, குயினோவா போன்றவற்றை சமைக்கும்போது உணவுகளில் புரோட்டீன் அளவும் சுவையும் கூடும். அதேபோல், சப்பாத்திக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதில் பன்னீர் வாட்டர் சேர்க்கலாம்.
மாமிசம், டோஃபு மற்றும் காய்கறிகளை கிரில் அல்லது பேக் (Bake) செய்வதற்கு முன், அவற்றின் மிருதுத் தன்மையும் சுவையும் கூடுவதற்காக மசாலாப் பொருட்களுடன் ஊற (Marinate) வைக்கும்போது வே வாட்டரும் சேர்த்து ஊற வைத்தால் சுவை மேலும் அதிகரிக்கும்.
பான்கேக், மஃபின், பிரட் போன்ற உணவுகளைத் தயாரிக்கும்போது, பால் அல்லது தண்ணீரை கூட்டுப்பொருளாகச் சேர்ப்பதற்குப் பதில் வே வாட்டர் சேர்த்து செய்தால் அதில் புரோட்டீன் சத்தின் அளவு கூடும்; உணவுகள் ஈரப்பதம் கொண்டதாகவும் மிருதுவாகவும் இருக்கும். வே வாட்டரை அடிப்படையாகக் கொண்டு சாஸ் மற்றும் கறி வகைகள் செய்யும்போது அவை க்ரீமியாகவும் மனதைக் கவரும் அதீத சுவை கொண்டதாகவும் இருக்கும்.
சார்க்ராட் (Sauerkraut), கிம்ச்சி (Kimchi) போன்ற உணவுகளைத் தயாரிக்கும்போது கூட்டுப் பொருட்களை நொதிக்கச் செய்வதற்கு வே வாட்டரை உபயோகித்தால் அதிலுள்ள புரோபயாடிக்குகளின் முழுப் பயனும் கிடைக்கப்பெற்று உணவின் ஊட்டச் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.
வே வாட்டரில் புரோட்டீன், லாக்டோஸ், வைட்டமின், மினரல், சிறிது கொழுப்புச் சத்து உள்ளன. இது நல்ல ஜீரணத்துக்கும், தசைகளை வலுவாக்கவும், எடை குறைப்பிற்கும் உதவும். வே வாட்டரை அப்படியே குடிக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து நான்கு நாள் வரை உபயோகிக்கலாம்.