உலகிலுள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் மனிதர்களுக்கு நன்மைகள் செய்யும் சத்துக்களும், தீங்கு விளைவிக்கும் காரணிகளும் உள்ளன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றிலுள்ள உயிர்ச்சத்தான வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து, இனிப்பு மற்றும் உப்பு , நல்லது செய்யும் கொழுப்பு, கெட்டது செய்யும் கொழுப்பு மற்றும் சக்தி தரும் கலோரிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு. அது நமக்கு எந்தளவுக்கு நன்மைகள் செய்யும் என்பதற்கு ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் நூற்றுக்கு இத்தனை மதிப்பெண்கள் என்று வழங்கி உள்ளார்கள் அமெரிக்காவின் புகழ் பெற்ற, ‘யேல் யுனிவர்சிட்டி’ மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
இதில் உலகிலுள்ள எல்லா உணவுப் பொருட்களும் இடம் பெறாவிட்டாலும், உலகின் முக்கியமான காய், கனிகள் மற்றும் உணவு பொருட்களும் இடம் பெற்றன. இந்த மதிப்பெண்கள் பட்டியலுக்கு அவர்கள், ‘ஓவரால் நியூட்ரீசனல் குவாலிட்டி இன்டெக்ஸ்’ (ONQI) என்று பெயர் சூட்டி உள்ளனர்.
ஒரு உணவுப் பொருட்களிலுள்ள வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவற்றின் மொத்த மதிப்பெண்களை கூட்டி அதிலிருந்து அந்த உணவுப் பொருட்களிலுள்ள சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு போன்றவற்றைக் கழித்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அந்த அட்டவணையில் 100க்கு 100 மற்றும் அதற்கு குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சூப்பர் உணவுகள் 20. அந்த மதிப்பெண்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்கள் உள்ளதா? என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற உணவுப் பொருட்கள் புரோக்கோலி, புளூ பெர்ரி பழங்கள், ஒக்ரா எனும் நம்மூர் வெண்டைக்காய், பச்சைப் பட்டாணி, ஆரஞ்சு பழம் ஆகியவை ஆகும்.
100க்கு 99 மதிப்பெண் பெற்றவை : பைன் ஆப்பிள், முள்ளங்கி.
100க்கு 96 மதிப்பெண்கள் பெற்றவை: ஆப்பிள், முட்டைக்கோஸ், தக்காளி.
100க்கு 94 மதிப்பெண்கள் பெற்றவை: தர்பூசணி, மாம்பழம், சிவப்பு வெங்காயம்.
100க்கு 91 மதிப்பெண்கள் பெற்றவை: திராட்சை, புதிய அத்திப்பழம், வாழைப்பழம், கொழுப்பு நீக்கப்பட்ட பால்.
100க்கு 89 மதிப்பெண்கள் பெற்றவை: அவாகோடா பழம், சால்மன் மீன்.
100க்கு 82 மதிப்பெண்கள் பெற்றவை: பிளாக் பெர்ரி பழங்கள், உலர்ந்த வாதுமை கொட்டை, லேட்டூஸ் கீரை, கைக்குத்தல் அரிசி, காட் மீன். சிப்பி உணவு. இறால் மீன்.
100க்கு 70 மதிப்பெண்கள் பெற்றவை: பிஸ்தா, எதுவும் கலக்காத பாப்கார்ன்.
100க்கு 57 மதிப்பெண்கள் பெற்றவை: அரிசி உணவு, கிட்னி வடிவ பீன்ஸ், மினரல் வாட்டர், பால்.
100க்கு 39 மதிப்பெண்கள் பெற்றவைக: வெனிலா யோகர்ட், ஆரஞ்சு ஜூஸ், பைன் ஆப்பிள் ஜூஸ், உலர்ந்த ஆப்பிள், தக்காளி ஜூஸ்.
100க்கு 30 மதிப்பெண்கள் பெற்றவைகள்: மாமிச துண்டுகள், தோலுடன் உள்ள கோழிக்கறி, பன்றிக்கறி.
100க்கு 25 மதிப்பெண்கள் பெற்றவை: தேங்காய், பர்கர், கிரீன் ஆலிவ்.
100க்கு 20 மதிப்பெண்கள் பெற்றவை: முட்டை பொரியல், பீனட் பட்டர்.
100க்கு 10 மதிப்பெண்கள் பெற்றவை: சாக்லேட் மற்றும் பிரெட். கருப்பு சாக்லேட்.
உடல் எடை அதிகரித்தல், இதயக் கோளாறுகள், தூக்கக் கோளாறுகள் போன்றவை அனைத்திற்கும் நீங்கள் தேர்வு செய்யும் தவறான உணவே காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் உணவியல் ஆராய்ச்சியாளர்கள். எனவே, இனிமேல் நீங்கள் விரும்பும் உணவுப் பொருட்களை தேர்வு செய்யும் முன் இந்தப் பட்டியலை ஒரு பார்வை பார்த்து விட்டு அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.