
தானியங்களில் 17 அமினோ அமிலங்கள் உள்ள ஒரே தானியம் உளுந்துதான். உளுந்து ஓர் ஆற்றல் மிக்க பருப்பு. அதைச் சாப்பிடுவதால் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டசத்துகளும் கிடைக்கின்றது. உளுந்தில் புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துகள் அதிகம் உள்ளன. மேலும், எலும்பு வலு பெற உளுந்து சாப்பிடுதல் மிகவும் நல்லது. நோய் தொற்றுகளிலிருந்து மீண்டவர்கள் உடல் நலம் தேற உளுந்தம் கஞ்சி சாப்பிட உடல் நலம் விரைவில் தேறும்.
பொதுவாகவே, உளுந்து வைத்து இட்லி, தோசை, வடை, களி என பல செய்வது வழக்கம். உளுந்து என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதன் மருத்துவ குணங்கள்தான். ஆம், பெண்கள் பூப்படையும் சமயம் அதனால்தான் உளுந்து வைத்து களி செய்துக் கொடுக்கிறார்கள். 100 கிராம் உளுந்தில் கிட்டத்தட்ட 18 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.
பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், பருவமடைந்த பெண்களின் கருப்பை பலம் சேர்க்கவும் உதவும் உணவு உளுந்து தான். இதனை வாரத்திற்கு மூன்று முறை கஞ்சியாகவோ அல்லது களியாகவோ சாப்பிட வேண்டும்.
வாலிப வயதினருக்கு பின்னாளில் ஆண்மைக் குறைவு பிரச்னை வராமலிருக்க வாரம் இருமுறை உளுத்தம் கஞ்சி அல்லது களி சாப்பிட வேண்டும். குறிப்பாக கருப்பு உளுந்து. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராமல் தடுக்கவும், எலும்பு பலவீனம் ஏற்படாமல் காக்கவும் வாரம் மூன்று முறை உளுந்து கஞ்சி அல்லது களி சாப்பிடுவது நல்லது.
கருப்பு உளுந்தின் தோலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சம அளவில் உள்ளன. உளுந்து தோலில்தான் நன்மைகள் செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமுள்ளன. இட்லி மாவு புளிக்க இதுதான் காரணம். குறிப்பாக, பெண்களுக்கு உளுந்து ஒரு வரம் என்றே சொல்லலாம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமத்தில் இருந்து தப்பிக்க, உளுந்தங்கஞ்சி பெரிதும் உதவுகிறது. இது தவிர, உடல் எடை கூடவும், சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளை அகற்றவும், எலும்புகளை பலப்படுத்தவும் உளுந்தங்கஞ்சி சிறந்ததாக விளங்குகிறது.
ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்தம் பருப்பை பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய வைத்து பின் கழுவி வர கரும்புள்ளிகள் விரைவில் மறையும். உளுந்தம் பருப்பு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் அழற்சி மற்றும் தசை வலிக்கு உளுந்தம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்தங்களி சாப்பிடுவதால் நம் உடலிற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஒரு உணவாக உளுந்தங்களி திகழ்கிறது. இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி, மூட்டு வலி போன்றவற்றில் இருந்து விடுபட உளுந்தங்களி உதவுகிறது. உளுத்தம் களியில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் உளுந்தம் களி சாப்பிட உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
உளுந்தங்களி சாப்பிடுவதால் தலைமுடி உதிர்தல் சரியாகும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். செரிமானத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். கல்லீரல் செயற்பாட்டிற்கு உதவும். உடல் சூடு தணியும். மேலும் சைனஸ் நோய் இருப்பவர்கள் வெல்லக் கரைசலுடன் சுக்குப் பொடியை சேர்த்து களி தயார் செய்து சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பையின் உள் அடுக்குகளில் ஏற்படும் வீக்கம் குறையும். மேலும், சிறுநீரக தொற்றுகளைத் தவிர்க்கும். உடல் பலவீனம் குறையும். நரம்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளுக்கு நல்லது. அதனால் குடல் இயக்கத்தை சரியாக்குகிறது. குழந்தை பெற்ற தாயின் பால் சுரப்பை அதிகரித்து, பாலின் தரத்தையும் அதிகரிக்கும். PCOS கொழுப்பு கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.