மற்ற வாழைப்பழங்களைப் போல இல்லாமல், செவ்வாழையில் அதிக சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கியிருக்கிறன. அந்த வகையில் செவ்வாழையில் அப்படியென்ன விசேஷ குணங்கள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
செவ்வாழையில் பொட்டசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் சி, தையமின் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. செவ்வாழைப் பழத்தில் ஏராளமான கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் உள்ளன. அதிக கரோட்டினாய்டு உள்ளடக்கம் சிவப்பு வாழைப்பழத்திற்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளை வழங்குகிறது. மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.
இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்லுலார் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீரேடிக்கல்களை அழிக்கின்றன, புற்றுநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கின்றன. செவ்வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
கால்சியம் சத்துக்கள் அதிகமாக செவ்வாழையில் உள்ளதால், பற்களுக்கு இது பலம் தருகிறது. பலவீனமான பற்கள் இருந்தாலோ அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது. எனவே, தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர்கின்றன. அதுமட்டுமல்ல, செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் இரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது என்கிறார்கள். பேக்கிங் சோடா, வாழைப்பழம், விர்ஜின் தேங்காய் எண்ணெய் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து தினமும் பல் துலக்கிவந்தாலே, பல் சொத்தைகள் வராமல் தடுக்கலாம். பற்களும் பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.
தூங்கி எழுந்து கொஞ்ச தூரம் நடக்கும்போது, வலி அதிகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். பிறகு கொஞ்ச நேரம் ஆனதும் வலி குறையும். பிறகு பழையபடி மாலையில் வலிக்கத் தொடங்கிவிடும். இந்த குதிகால் வாதத்திற்கு செவ்வாழைப் பழம் ஒரு அருமருந்து.
செவ்வாழைப்பழம் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செவ்வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் செல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது ஆரம்பகால கருச்சிதைவையும் தடுக்கிறது. செவ்வாழைப்பழம் குறைந்த கலோரி கொண்ட உணவு. இந்தப் பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதன் விளைவாக நீங்கள் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் நிறைவாக உணர்கிறீர்கள். இது உங்கள் மொத்த கலோரி அளவைக் குறைத்து எடையையும் குறைக்கும்.
சிலர் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் அதிகமான அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். இவர்கள் அப்பழக்கத்தை நிறுத்திய பின்னர் நிகோடினால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க செவ்வாழை சாப்பிடலாம். இதிலிருக்கும் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிகோடினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவுகின்றன.
வாழைப்பழத்தில் அதிக அளவு டிரிப்டோபான் உள்ளது. இது செரோடோனினாக மாற்றப்படுகிறது. செரோடோனின் மனநிலையை மேம்படுத்தும் மூளை நரம்பியக்கடத்தி என்று அறியப்படுகிறது. இது மனச்சோர்வை சமாளிக்க உதவுகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்தும். இதில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் சத்து தசைகளை தளர்த்தி நல்ல தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது.
இப்படிப் பல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் செவ்வாழையை சாப்பிட சிறந்த நேரம் காலை 6 மணி. காலையில் சாப்பிட முடியவில்லை என்றால் பகல் 11 மணியளவில் சாப்பிடலாம். உணவு சாப்பிட்டவுடன் செவ்வாழையை சாப்பிட்டால் மந்தமாக ஒரு உணர்வைக் கொடுக்கும். மேலும், வாழைப்பழத்தில் இருக்கும் முழு சத்துக்களும் கிடைக்காமல் போகும். அதனால் சாப்பிடுவதற்கு முன்தான் செவ்வாழையை சாப்பிட வேண்டும்.