
விட்டமின் பி12 சத்து ரத்தச் சிவப்பணுக்களை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிப்பதற்கும், டி.என்.ஏ. வை ஒருங்கிணைப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இது உடலின் ஆற்றல் நிலையையும் மூளை செயல்பாட்டையும் ஆதரிக்கிறது. ரத்த சோகையைத் தடுத்து சோர்வு மற்றும் பலவீனத்தையும் தடுக்கிறது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான மனநிலையை ஆதரிப்பதற்கும், அவர்களின் எலும்பு ஆரோக்கியம், நல்ல கண் பார்வை மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பி12 சத்து மிகவும் முக்கியமானதாகும்.
விட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகள்: பொதுவாக, பி12 சத்து விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகளில்தான் அதிகமாக உள்ளன. சைவ உணவு உண்பவர்களுக்கு பால் பொருள்கள், முட்டைகள், செறிவூட்டப்பட்ட தானியங்கள், புளித்த உணவுகள் போன்றவற்றில் இது இருக்கிறது.
பால் பொருட்கள்: பால், தயிர், பாலாடைக் கட்டி, பனீர், குறைந்த கொழுப்புள்ள பால், சீஸ் ஆகியவற்றில் விட்டமின் பி12 நிறைந்துள்ளது.
முட்டை: முட்டையின் மஞ்சள் கரு, பி12 சத்து நிறைந்ததாகும். சைவ உணவு உண்பவர்கள் கூட முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக் கொள்ளலாம்.
காளான்கள்: மண்ணில் விளையும் வெள்ளை பட்டன் காளான்களில் மண்ணில் உள்ள சிறிய அளவு பாக்டீரியாக்களின் சத்து சேர்கின்றன. அதனால் காளான்களை அடிக்கடி உண்ணலாம்.
புளித்த உணவுகள்: தயிர், கிம்ச்சி போன்ற உணவுகளில் பாக்டீரியாக்களின் நொதித்தல் காரணமாக பி12 சத்து கிடைக்கின்றது. நீண்ட நேரம் புளிக்க வைக்கப்பட்ட இட்லி தோசை மாவுகளில் பி12 பாக்டீரியா உள்ளது. அதனால் இட்லி, தோசை போன்றவற்றில் சிறிதளவு பி12 சத்து கிடைக்கிறது.
முருங்கை இலைகள்: முருங்கைக்கீரை பி12 சத்து நிறைந்ததாகும். ரத்த சோகையை தடுத்து உடலுக்கு உற்சாகத்தையும் இரும்புச் சத்தையும் வழங்க வல்லது. முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறை பொரியல் செய்து சாப்பிடலாம். கூட்டு செய்தும் உண்ணலாம் அல்லது முருங்கைக் கீரையை காய வைத்து முருங்கைப் பொடி செய்து வைத்துக் கொண்டும் உண்ணலாம்.
செறிவூட்டப்பட்ட உணவு வகைகள்: சோயா பால், கோதுமை மாவு போன்றவற்றில் நல்ல பி12 சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்து ஈஸ்ட்டிலும் பி12 சத்து உள்ளது.
அசைவ உணவு வகைகள்:
இறைச்சி: கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்பு இறைச்சிகள் B12 சத்தை அதிக அளவில் கொண்டுள்ளன.
மீன்: சால்மன், சூரை மீன், சிப்பிகள், நண்டு, ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் B12 சத்து மிகுந்துள்ளது.
பி12 சத்து கொண்ட காய்கறிகள், பழங்கள்: அவுரி நெல்லி, ஆரஞ்சு போன்ற பழங்களில் மட்டும் விட்டமின் B12 சத்து உள்ளது. காய்கறிகளில் காளான்கள் மற்றும் முருங்கைக்கீரை மட்டுமே விட்டமின் B12 சத்து கொண்டுள்ளன.
விட்டமின் பி12 சத்து ஏன் மிகவும் அவசியம்?
விட்டமின் பி12 ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கும் அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நரம்பு சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதய நோய்க்கான ஆபத்து காரணிகளைக் குறைப்பதன் மூலம் பி12 இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. சிலருக்கு கை, கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, நினைவாற்றல் பிரச்னைகள், நடப்பதில் சிரமம், மனநிலை மாற்றங்கள் மற்றும் கவனக் குறைவு ஆகியவை விட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். எனவே, இவர்கள் பி12 சத்து நிறைந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.