மெனோபாஸ் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணிற்கும் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மாதவிடாய் நிற்கும். எல்லா பெண்களுமே ஒரு நாள் இந்த நிலையை கடந்துதான் வர வேண்டும். சாதாரணமாக பெண்ணுக்கு ஒரு வருடம் மாதவிடாய் வராமல் இருந்தால், அது மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. அதேசமயம் மெனோபாஸ் தொடங்கும் முன் காலம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மாதவிடாய் அவ்வப்போது வரும். இதற்கு இன்னும் பல்வேறு விதமான அறிகுறிகள் உள்ளன. பொதுவாக பெண்களுக்கு 40 முதல் 50 வயதில் மெனோபாஸ் வரும். இந்த நேரத்தில் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையின்மை, பெண்களின் எடையை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
மெனோபாஸ் உடலின் எடையை பாதிப்படையச் செய்யும் காரணங்கள்:
* மாதவிடாய் காலத்தில் அனைத்துப் பெண்களின் உடலிலும் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த நேரத்தில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையத் தொடங்குகிறது.
* இந்த நிலை பெண்களின் உடலில் பல செயல்பாடுகளை பாதிப்படையச் செய்கிறது. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பலவீனமடைகிறது மற்றும் எடை அதிகரிக்கச் செய்கிறது.
* ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்களின் எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன.
* ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் உடலின் கலோரிகளை எரிக்கும் திறனும் குறைந்து, பெண்களின் தொப்பை மேலும் அதிகரிக்கத் தொடங்குகிறது.
* மெனோபாஸ் காலத்தில் எல்லாப் பெண்களும் எடை அதிகரிப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இது பெரும்பாலான பெண்களை பாதிக்கிறது என்பதே உண்மை.
* மெனோபாஸ் காலத்தில் கொழுப்பு செல்களில் ஏற்படும் மாற்றங்களும் எடை அதிகரிக்கக் காரணமாகின்றன.
* மாதவிடாய் காலத்தில் எவ்வளவு எடை அதிகரிப்பீர்கள் என்பது அவரவரது உணவு, வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு மற்றும் மன அழுத்தத்தைப் பொறுத்தது.
* இந்த நேரத்தில் பல பெண்கள் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். மன அழுத்த உணர்வு பெண்களின் எடையையும் பாதிக்கிறது.
* மாதவிடாய் காலத்தில் எடையை பராமரிக்க, சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை மிகவும் முக்கியம்.
மெனோபாஸ் காலத்தில் வீட்டின் கண்களாக இருக்கும் பெண்கள் தங்கள் உடற்தகுதியில் கவனம் செலுத்தி குழந்தைகளையும், குடும்பத்தையும், தங்களையும் பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.