தலைவலி வந்தால் மாத்திரை போடுகிறோம், காய்ச்சல் என்றால் வீட்டு வைத்தியம் பார்க்கிறோம். ஆனால் சில வலிகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடும். தோள்பட்டை வலி அப்படிப்பட்டதுதான். சிலருக்கு அடிக்கடி தோள்பட்டை வலி வரும். நாமும் அதை சாதாரணமாக நினைத்து வலி நிவாரணி தைலம் தேய்த்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இந்த தோள்பட்டை வலி, சில நேரங்களில் சாதாரண வலியாக இல்லாமல், நம் உடல் உறுப்புகளின் சிக்கலை நமக்கு உணர்த்தும் சிக்னலாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
குறிப்பாக, வலது தோள்பட்டையில் தொடர்ந்து வலி இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அது பித்தப்பை கற்களின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பித்தப்பை கற்கள் என்றால் என்ன என்று பலரும் யோசிக்கலாம். பித்தப்பையில் கொழுப்பு, பிலிரூபின் மற்றும் கால்சியம் உப்புகள் சேரும்போது, அவை சிறிய கற்களாக உருவாகின்றன. இந்த கற்கள் வெறும் வலியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை வயிற்று வலி, குமட்டல், காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பல பிரச்சனைகளையும் கொண்டு வரலாம். சில நேரங்களில் இந்த பித்தப்பை கற்கள் வலியை தோள்பட்டையிலும் பிரதிபலிக்கும்.
தோள்பட்டை வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். நாம் பளு தூக்கி வேலை செய்தாலோ அல்லது வேறு உடல் இயக்க குறைபாடுகள் இருந்தாலோ கூட தோள்பட்டை வலி வரலாம். ஆனால் பித்தப்பை கற்கள் காரணமாக வரும் தோள்பட்டை வலி கொஞ்சம் வித்தியாசமானது. இது பொதுவாக வலது தோள்பட்டையில் மட்டும் உணரப்படும். வயிற்றின் மேல் பகுதியில், குறிப்பாக வலது பக்கத்தில் வலி அதிகமாக இருக்கும். இந்த இரண்டு வலிகளும் ஒரே நேரத்தில் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதால், பலரும் இதை சாதாரண வலி என்று அலட்சியம் செய்து விடுகிறார்கள்.
பித்தப்பை கற்கள் இருந்தால் வேறு சில அறிகுறிகளும் தென்படும். சாப்பிட்ட பிறகு, குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு, அஜீரணம் அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் போவதும், குமட்டல், வாந்தி, காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை என்று வரும்போது, அது கற்களின் நிலை மற்றும் தீவிரத்தை பொறுத்தது. ஆரம்ப கட்டத்தில் உணவு கட்டுப்பாடுகள் மூலம் சரி செய்யலாம். கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. பிரச்சனை தீவிரமாக இருந்தால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். லேப்ராஸ்கோபி அல்லது ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற முடியும்.
எனவே, தோள்பட்டை வலியை அலட்சியம் செய்யாதீர்கள். குறிப்பாக வலது தோள்பட்டையில் வலி தொடர்ந்து இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பித்தப்பை கற்கள் பிரச்சினையை எளிதாக குணப்படுத்த முடியும்.