நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் மிகவும் முக்கியமாகும். தினமும் கட்டாயம் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு தூங்கும்போது ரிலாக்ஸாக நல்ல பொசிஷனில் படுத்துத் தூங்க வேண்டியது அவசியமாகும். சிலருக்கு கவிழ்ந்து படுத்துத் தூங்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு தூங்கினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கவிழ்ந்து படுத்துத் தூங்குவதால், முகத்திற்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருப்பதால், விரைவில் முகச்சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், படுக்கையில் உள்ள அழுக்குகள் முகத்தில் படுவதன் மூலமாக பருக்கள் போன்ற சருமப் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
2. பெண்கள் கவிழ்ந்து படுத்து தூங்குவதால், அதிகமாக மார்பக வலி ஏற்படக்கூடும். எனவே, நல்ல நிலையில் படுத்து அமைதியாக உறங்கும் முறையை கடைப்பிடிப்பது நல்லதாகும்.
3. கவிந்து படுத்து தூங்குவதால், நாம் இரவு சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாமல் செரிமானப் பிரச்னைகள், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படும்.
4. இரவு முழுவதும் கவிழ்ந்து படுத்து தூங்குவதால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். இதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கவிழ்ந்து படுத்து தூங்குவதால் இதயம் மற்றும் நுரையீரலில் அழுத்தம் ஏற்படுவதால், சுவாச செயல்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
5. கவிழ்ந்து படுத்து தூங்குவதால், வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு வயிறு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
6. கவிழ்ந்து படுத்து தூங்கும்போது மூச்சு விட வசதியாக கழுத்தை ஒருபக்கமாக திருப்பி வைத்துப் படுத்திருப்போம். இதனால் கழுத்தில் பிடிப்பு ஏற்படும். இவ்வாறு படுக்கும்போது முதுகின் கீழ்பகுதி வளைந்துக் காணப்படுவதால் இடுப்பு, முதுகெலும்பு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வலி ஏற்படுகிறது.
7. கர்ப்ப காலத்தில் பெண்களால் சரியாகத் தூங்க முடியாது. அதற்காக பெண்கள் கர்ப்ப காலத்தில் கவிழ்ந்து படுத்து தூங்குவது அவர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தைகளுக்கும் நல்லதல்ல. இதுபோன்ற காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வலதுப்பக்கம் திரும்பித் தூங்குவதைக் காட்டிலும் இடதுப்பக்கம் திரும்பித் தூங்குவதே சிறந்ததாகும். எனவே, 'கவிழ்ந்து படுத்தால்தான் தூக்கம் வருகிறது' என்று சொல்பவர்கள் அதை மாற்றிக்கொள்ள முயற்சிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகுக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.