
பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சுதந்திரமாகப் புகைத்துக் கொண்டிருந்தார். பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் அனைவரும் புகையால் பாதிக்கப்பட்டார்கள். சிலர், அந்தப் புகை தம் நாசிக்குள் புகுந்துவிடாதபடி தம் மூச்சை அடக்கிக்கொள்ள முயற்சித்தார்கள். வேறு சிலர் கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். இன்னும் சிலர் புகை பிடிப்பவரின் புகையை சுமந்துவரும் காற்றுக்கு எதிர்ப்புறத்தில் போய் நின்றுகொண்டார்கள். ஆக, அந்த ஒரு புகைபோக்கியால் அங்கே நின்றிருந்த சுமார் இருபது பேர் தம் சுதந்திரத்தை இழந்து விட்டிருந்தார்கள்.
மிகவும் பொறுக்க முடியாத ஒருவர், ‘‘இந்தப்பா, உன் வீட்ல போய் புகை பிடி; இங்க வந்து எங்க உடல்நலத்தைக் கெடுக்காதே,’’ என்று கோபப்பட்டார். அதற்கு அந்தப் புகைபோக்கியோ, ‘‘சிகரெட் வாங்கற கடைக்கு முன்னாலதானே புகை பிடிக்கக்கூடாதுன்னு போர்டு போட்டிருக்கு; இங்க போடலியே. அதனால நான் பிடிப்பேன், அதைக் கேட்க நீ யார்?’’ என்று அகங்காரமாக பதிலளித்தார். உடனே, ‘‘அப்படியா, புகை பிடிக்கத்தானே ஆசைப்படறே? பிடிச்சுக்கோ; ஆனா அதை வெளியே விடக்கூடாது, ஜாக்கிரதை...’’ என்று சொல்லி, அவரை அடிக்கவே போய்விட்டார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தி, புகைப்போக்கியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
ஏதேனும், கொண்டாட்டம், களியாட்டத்தின்போது மட்டும் மேற்கொண்டாலும், அதோடு நின்றுவிட வேண்டிய தற்காலிகப் பழக்கம் அது. ஆனால் அது கொடுத்த போதை சுகத்தால், தனித்திருக்கும்போதும் தொடர்கிறது. தம்மைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளவும், மூத்தவர்களுக்குத் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும், சில விடலைப் பிள்ளைகள் புகை பிடிக்கும் பழக்கத்தை, தீய நண்பர்களின் தூண்டுதலால் மேற்கொள்கிறார்கள்.
அடுத்தடுத்து மது, வாயில் அடக்கிக்கொள்ளும் புகையிலை, போதைப் பொருள், ஊசி என்று பழக்கம் வளர்ந்து, தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் சீரழிக்கிறது.
பொதுவாக தீயப் பழக்கம் எதுவுமே தொடர வேண்டாதது; எளிதாக விட்டொழிக்கக்கூடியதுதான் என்றாலும், அதை விடமுடியாமல் தொடர்வது மனித பலவீனம்தான். போதைப் பொருளைப் பயன்படுத்தும் தன்னை சமுதாயம் இழிவாகத்தான் பார்க்கிறது, நடத்துகிறது என்பதை உணர்பவர்களில் சிலர் அந்தப் பழக்கத்தைக் கைவிடுகிறார்கள்; ஆனால் சிலரோ இன்னமும் அந்த அடிமைத் தளையிலிருந்து விடுபட இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் பல தொண்டு நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மிகுந்த பாசத்துடனும், மனிதாபிமானத்துடனும் அந்த அடிமைகளிடம் பேசி, அவர்களைப் பக்குவமாக நடத்தி, அந்தப் பழக்கத்திலிருந்து அவர்களை நிரந்தரமாக மீட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக போதைப் பொருள் அறிக்கை, புதிது புதிதாக உருவாகும் போதைப் பொருட்கள் பற்றிய கவலையை அது வெளியிட்டுள்ளது. உலகில் 15 முதல் 64 வயதுக்குட்பட்ட சுமார் 25 கோடி பேர் இவ்வாறு போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் இது உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதம் என்றும் தன் அச்சத்தைத் தெரிவித்திருக்கிறது.
மிகுந்த கவலைக்குள்ளானவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துவதால் தம் கவலைகளிலிருந்து தாம் மீண்டுவிடுவதாக, அல்லது மறந்து விடுவதாகத் தம்மையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், அப்போதுதான் ஆழ்மனதில் புதைந்திருக்கக்கூடிய வேதனைகள் பீறிட்டுக் கிளம்பும் என்றும் அதனால் அனாவசிய சந்தேகங்களும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்குகின்றன என்றும் சொல்கிறார்கள், உளவியல் அறிஞர்கள். பெரும்பாலான கொலைக் குற்றங்களைச் செய்பவர்கள் போதை மயக்கத்திலேயே அது பற்றி முடிவெடுப்பதும், அதனைச் செயல்படுத்துவதுமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
விளையாட்டாக, அப்போதைக்குப் பொழுதுபோக்காக ஆரம்பிக்கும் போதைப் பழக்கம் அதனை மேற்கொள்பவரை முற்றிலுமாக அழித்துவிட்டுத்தான் ஓய்கிறது என்ற உண்மையை, அப்படி அழிந்தவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தாவது தெரிந்துகொள்வதுதான் உத்தமம்.