தினசரி நீண்ட நேரம் ரீல்ஸ் (Reels) வீடியோக்களைப் பார்க்கிறீர்களா? போச்சு! 

Reels Video
Reels Video
Published on

சமூக ஊடகங்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், ரீல்ஸ் எனப்படும் குறுகிய வீடியோக்கள் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. பொழுதுபோக்குக்காகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பலர் ரீல்ஸ்களை அதிகமாகப் பார்க்கின்றனர். ஆனால், இந்த பழக்கம் நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே ரீல்ஸ் பார்ப்பதற்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சீனாவில் நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவர்களின் உடல் நலத்தை உன்னிப்பாகக் கவனித்ததில், அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள், பெங்களூரைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் ஒருவரால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பிறகு, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், ரீல்ஸ் பார்ப்பது கவனச்சிதறலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தூக்கத்தின் தரத்தையும் குறைக்கும் என்று எச்சரிக்கின்றனர். தூங்கச் செல்லும் முன் ரீல்ஸ் பார்ப்பது, நமது நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலை ஒருவித பதற்றமான நிலைக்குத் தள்ளுகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்குத் தூக்கமின்மை கோளாறு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வழிகள்!
Reels Video

மேலும், தூக்கமின்மை பல்வேறு உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எரிச்சல், மனநிலை மாற்றங்கள், மன அழுத்தம், பதட்டம் போன்ற உணர்வுகள் தூக்கமின்மையால் ஏற்படலாம். எனவே, இரவில் தூங்குவதற்கு முன்பு மட்டுமல்லாமல், பகல் நேரத்திலும் ரீல்ஸ் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது அவசியம்.

நல்ல தூக்கத்தைப் பெற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பது, இரவு உணவை சீக்கிரம் முடிப்பது, வேலை மற்றும் பிற அலுவல்களை படுக்கைக்குச் செல்வதற்கு முன்பே முடித்துக்கொள்வது, மற்றும் மின்னணு சாதனங்களைத் தவிர்ப்பது போன்றவை நல்ல தூக்கத்திற்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
இனி இன்ஸ்டாகிராமிலேயே ரீல்ஸ் பதிவிறக்கம் செய்யலாம்.
Reels Video

சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். பொழுதுபோக்கு என்ற பெயரில் நம் உடல் நலத்தை ஆபத்தில் தள்ளக்கூடாது. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கு ஏற்ப, ரீல்ஸ் பார்ப்பதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டுப்படுத்துவது நல்லது. நம் உடல் மற்றும் மன நலத்தைப் பாதுகாக்கும் வகையில், சமூக ஊடகங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com