இன்றைய அவசர உலகில், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய் (Diabetes) என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. நீரழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமாக மாறக் கூடும். அதுவும் குளிர் காலங்களில் நீரழிவு நோயாளிகள் சர்க்கரையின் அளவை பராமரிப்பது சவாலான காரியமாக இருக்கும்.
காலை வேளையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது நாம் முதலில் சாப்பிடும் உணவுகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் விளைவுகளை அறிந்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
சர்க்கரை அளவை குறைக்கும் உணவை உண்டால், சர்க்கரை குறைகிறதா என்பதை தெரிந்துகொள்ள, முதலில் சர்க்கரை நோய் பரிசோதனை இயந்திரம் வாங்குங்கள்...
வெறும் வயிற்றில் காலையில் என்ன சாப்பிடலாம்?
1. காலையில் எழுந்த உடனே ஒரு டம்ளர் அளவில் வெதுவெதுப்பான நீரைப் பருகுவது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்கும். முதலில் நீர் அல்லது திரவ நிலையில் உள்ள (காபி, டீ தவிர்த்து) பானங்களை அருந்துவது இரைப்பைக்கு நலம் தரும் செயலாக இருக்கும்.
2. அதன் பின்னர் இரவு முழுவதும் ஊறவைத்த 5 பாதாம் பருப்புகள் அல்லது இரண்டு வால்நட் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பை வழங்கும்.
3. சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் சத்தான நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் தரும்.
காலை உணவில் முளைகட்டிய தானியங்கள், சிறு தானியங்களில் செய்த உப்புமா, பொங்கல், கஞ்சி போன்றவற்றை செய்து சாப்பிடலாம். இவற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக ஏற்றாமல் இருக்கும்.
4. உணவில் வெள்ளரிக்காய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் சாலட் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை பசி உணர்வை கட்டுப்படுத்துவதுடன் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
5. இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவும் நெல்லிக்காய் சாறு அல்லது பாகற்காய் சாறு , கிரீன் டீ போன்றவைகளை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள் ?
சில தினசரி உணவுகள் அனைவருக்கும் சரியாக இருந்தாலும், நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்திவிடும் அபாயம் கொண்டவை. அதனால், காலையில் இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
1. இனிப்பு மிக்க ஊட்டச்சத்து பானங்கள், இனிப்பு கலந்த தேநீர் மற்றும் காபி ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை. இது மட்டுமல்லால் இயற்கையான இனிப்பு கொண்ட பழச்சாறுகளையும் காலையில் பருகக் கூடாது.
2. மைதாவில் செய்த பிஸ்கட், கேக், வெள்ளை பிரட் ஆகியவை முதலில் தவிர்க்கப்பட வேண்டியவை. இவை உடனடியாக இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும்.
3. சீனி மற்றும் வெல்லத்தில் செய்யப்பட்ட இனிப்பு பண்டங்கள், மிட்டாய்கள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவையும் தவிர்க்க வேண்டும்.
4. இயற்கையில் கிடைக்கும் இனிப்பு மிகுந்த வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம் மற்றும் உலர வைக்கப்பட்ட பழங்களையும் தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக சர்க்கரையும், அதிக கலோரிகளும் நிறைந்துள்ளன.
5. காலையிலேயே வறுத்த அல்லது பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, சர்க்கரை அளவையும் பாதிக்கும்.
மேற்கூறியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் காலையிலேயே இரத்த சர்க்கரை உயர்வாகாமல் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது மட்டுமல்லாமல் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். நீரழிவு நோய்க்கான மருந்துகளையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தினசரி நடைப்பயிற்சி, போதுமான அளவில் தூக்கம் ஆகியவற்றையும் நடைமுறைப் படுத்துங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
சர்க்கரை அளவை குறைக்கும் உணவை உண்டால், சர்க்கரை குறைகிறதா என்பதை தெரிந்துகொள்ள, முதலில் சர்க்கரை நோய் பரிசோதனை இயந்திரம் வாங்குங்கள்...