உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒருவர் ஒரு நாளில் 25 கிராம் வரை சர்க்கரையை உட்கொள்ளலாம். இதை விட அதிகமாக சர்க்கரை சாப்பிடுவது உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயில் இந்தியா முதன்மையான நாடாக இருந்து வருகிறது. சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு வருவதாக எண்ணி, மக்கள் இப்போதெல்லாம் சர்க்கரை உள்ள உணவுப் பண்டங்களை தவிர்க்க தொடங்கியுள்ளனர்.
உண்மையில் சர்க்கரை சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் வருகிறதா? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறியலாம்.
ஒருவரின் உடலில் இன்சுலினை சரியாக உற்பத்தி செய்யாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இன்சுலின் உற்பத்தியில் ஏதேனும் குறைபாடு இருந்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று டைப்-1 நீரிழிவு , இது ஒருவரின் மரபணு சார்ந்தது. சிலருக்கு இது பிறப்பிலிருந்தே வரலாம். இரண்டாவது வகை டைப்-2 நீரிழிவு, இது மோசமான உணவுப் பழக்க வழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறையாலும் ஏற்படுகிறது. பெரும்பாலும் மக்கள் வகை-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஒருவருக்கு வருவதில்லை. நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணம் ஒருவரின் மரபணு. அவரின் உடல் பருமம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நாடு முழுக்க தினமும் சர்க்கரை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சொல்லப் போனால் இந்தியாவில் சர்க்கரையை ஒருவர் தினசரி உணவில் ஒரு பகுதியாக கொள்கிறார். சர்க்கரை சாப்பிடும் அனைவருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் வருவதில்லை. சர்க்கரையை சராசரி அளவில் சாப்பிட்டு , உடலுழைப்பு செய்யும் நபர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறைவாகவே உள்ளது.
சர்க்கரையே சாப்பிடாத நபர் அதிகளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவர் சர்க்கரை உணவுகளையோ அல்லது சர்க்கரையையோ சாப்பிடுவதை நிறுத்தினால், நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் குறையும். ஆனால் , சர்க்கரையை கைவிடுவதற்கும் நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்கும் எந்த மருத்துவ தொடர்பும் இல்லை.
ஒருவரின் வாழ்க்கை முறை சரியாக இல்லாவிட்டால், அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஒருவர் அதிக எடையுடன் இருந்து, மரபணுக்களில் பிரச்சனைகள் இருந்தால், சர்க்கரை சாப்பிடாவிட்டாலும் அவருக்கு நீரிழிவு நோய் வரும்.
எனவே, மக்கள் குறைந்த அளவில் சர்க்கரையை உட்கொள்ளலாம். முற்றிலும் தவிர்ப்பது தேவையற்றது. ஒருவர் தினசரி உடற்பயிற்சி செய்கிறார், கடுமையாக உழைக்கிறார், அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் மரபணு நீரிழிவு நோய் இல்லை என்றால் அவர் தினமும் இனிப்புகளை அளவுடன் கவலை இல்லாமல் சாப்பிடலாம் .