
தினமும் காபி அருந்தும் பழக்கம் உலகம் முழுவதும் உள்ளது. காபி ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக உலகெங்கிலும் அறியப்படுகிறது. காபி குடிப்பதால் பல நன்மையான விளைவுகளும், பல தீமையான விளைவுகளும் உடலில் ஏற்படும். இது ஒருவர் காபி அருந்தும் அளவை பொறுத்து மாறுபடும் .
சீனாவில் உள்ள ஹூபே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்ஸ்டன்ட் காபி பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சீன மக்கள் இதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் மரபணுக்கள் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டன. இந்த ஆய்வில் இன்ஸ்டன்ட் காபி அருந்துவதற்கும் ஏ.எம். டி (Age-Related Macular Degeneration) பார்வை குறைபாட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வில் இன்ஸ்டன்ட் காபியின் தீமைகள் பற்றி அறிந்து கொண்டனர். இன்ஸ்டன்ட் காபியில் அக்ரிலாமைடு என்ற ரசாயனம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது. மேலும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட லிப்பிடுகள் மற்றும் பிற இரசாயன பொருட்களையும் இதில் சேர்த்துள்ளனர்.
இந்த சேர்க்கையினால் கண் மாகுலர் சிதைவு , ஏ.எம்.டி எனப்படும் பார்வை குறைபாடு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த விளைவுகள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது. இது முழுமையான குருட்டு தன்மையை ஏற்படுத்தாது என்றாலும் பாதிக்கும் மேல் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
விழித்திரையில் உள்ள மாகுலா, வயது தொடர்பான காரணத்தினால் சிதைய ஆரம்பிக்கும். அப்போது கண்ணின் மையப் பகுதியில் பார்வை குறைபாடு ஏற்படத் தொடங்கும். இதனால் ஒருவரால் எதையும் படிக்க முடியாமல் போகலாம், எதிரே இருப்பவரின் முகங்களை அடையாளம் கண்டறிய முடியாமலும் போகலாம்.
ஆனால், அதே நேரத்தில் பக்கவாட்டில் பார்வை திறன் இருக்கும். இது மிகக்குறைந்த பார்வையை மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு விட்டு வைக்கிறது. இதன் மூலம் ஒளியையும், நிறத்தையும் ஓரளவு காணலாம். ஆனால் , எதிரே இருப்பது என்ன பொருள் என்பதை கண்டறிய முடியாது.
இன்ஸ்டன்ட் காபி பருகுவதால் , ஏ.எம்.டி பார்வை குறைபாடு நோய் உருவாதலை ஹூபே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள சிவேலியு இன் கண் மருத்துவத் துறை பதிப்பித்த இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவர்கள் வெளியிட்ட அறிக்கையில் காபி குடிப்பது, பார்வை குறைபாடு அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி முடிவுகளை தெரிவித்து இருந்தனர். ஆனால், அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளது இன்ஸ்டன்ட் காபி என்ற வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும். இதனால் பார்வை திறனை பாதுகாக்க நினைப்பவர்கள் சாதாரண காபியை மட்டும் குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)