பனங்கிழங்கு வைட்டமின் பி, சி நிறைந்த பாதாமுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட கிழங்காகும். நூறு கிராம் பனங்கிழங்கில் எண்பத்தேழு கிராம் கலோரிகளும் எழுபத்தி ஏழு கிராம் நீர்ச்சத்தும் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்தக் கிழங்கு பெருக்குகிறது. பனங்கிழங்கை சாப்பிடுவதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகும்.
பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதால் இதை உண்பதால் மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. இதனால் குடல் புழுக்கள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் பெருகும். இரத்தக் கொழுப்பு கட்டிகள் உருவாவதைத் தடுப்பதால் இதய நோய் வராமல் தடுக்கச் செய்கிறது.
பனங்கிழங்கில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மையை கூட்டுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பாதிப்புகள் குறைகிறது. அது மட்டுமல்லாமல், மெக்னிசியமும் இதில் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மொத்தத்தில் எலும்பு கோளாறுகள் வராமல் இது தடுத்து விடும்.
கருப்பை கோளாறுகளை நீக்க பனங்கிழங்கு பேருதவி புரிகின்றது. இந்தக் கிழங்கை வேக வைத்து தூளாக்கி அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கருப்பை வலுப்பெறும் அல்லது பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பை உட்பட உடல் உறுப்புகள் பலமடையும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த பனங்கிழங்கை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது வைரஸ் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இது வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
பனங்கிழங்கில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், இதில் வைட்டமின் ஏ, அமினோ அமிலங்கள், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
பனங்கிழங்கை சிறிது மஞ்சள் சேர்த்து வேகவைத்து பின்னர் கிழங்கை வெயிலில் காயவைத்து அதை மாவாக்கி கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்து உடல் வலுவாகும்.
பனங்கிழங்கு வாயு தொல்லை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்தக் கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். தேவைப்படுபவர்கள் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கை அரைத்து மாவாக்கி அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால் பசி நீங்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே, இதை சாப்பிட்ட பிறகு மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்று விட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் உண்டாகும்.
பனங்கிழங்கு செரிமானத்திற்குத் தேவைப்படும் என்சைமை உற்பத்தி செய்வதால் செரிமானம் சீராக இருக்கும். அதோடு, உணவின் ஊட்டச்சத்து உறிஞ்சலும் வேகமாக இருக்கும்.
பனங்கிழங்கில் இருக்கும் புரதச்சத்து ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. அதாவது, உடலில் செல்களைப் பராமரிப்பது, உறுப்புகளை பழுது நீக்கம் செய்வது, சருமத்தை புத்துணர்ச்சியாக்குவது, எலும்பு வளர்ச்சியை ஊக்குவிப்பது, தசை வளர்ச்சியை மேம்படுத்துவது என அனைத்தையும் செய்வதற்கு புரோட்டின் முக்கியப் பங்காற்றுகிறது. அது பனங்கிழங்கில் நிறைவாக இருப்பதால் வளர்சிதை மாற்றத்தில் எந்த இடையூறும் ஏற்படுவதில்லை.
அனிமியா எனப்படும் இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறது எனில் பனங்கிழங்கு சிறந்த உணவாக இருக்கும். இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் உடல் சோர்வு, கவனமின்மை, குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று தொந்தரவுகள் இருக்கிறதெனில் இவை அத்தனைக்கும் பனங்கிழங்கில் பலன் கிடைக்கும். இது சிவப்பு இரத்த செல்களை பராமரித்து உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. அதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது.
பனங்கிழங்கில் ஒமேகா 3 சிறந்த மூலமாக இருப்பதால் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவாக இது இருக்கிறது. இயற்கையான முறையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பனங்கிழங்கு சிறந்ததாக உள்ளது.
பொங்கலுக்குப் பிறகு பனங்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். அவற்றை வாங்கி சாப்பிட்டு, உடல் நலத்தைப் பேணுங்கள்.