

ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்துவிட்டு, உடல் முழுவதும் வியர்த்து கொட்டும் போது, "அப்பாடா! இன்று நிறைய எடையை குறைத்துவிட்டோம், ஏகப்பட்ட கலோரிகள் எரிந்துவிட்டன!" என்று நாம் நினைப்பதுண்டு. வியர்வைக்கும் எடை குறைப்பிற்கும் இடையே தொடர்பு உண்டா? வியர்த்தால் கலோரிகள் எரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
1. வியர்வை ஏன் ஏற்படுகிறது?
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, வியர்வை என்பது கொழுப்பு கரைவதைக் குறிக்காது. அது உடலின் குளிர்விக்கும் அமைப்பு. நமது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதி, உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது கடுமையான வெயில் காரணமாகவோ உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, அதை சமநிலைப்படுத்த வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது. இந்த சுரப்பிகளின் வழியே வியர்வை வெளியேறி, காற்றில் ஆவியாகும் போது நமது உடல் இயற்கையாகவே குளிர்ச்சியடைகிறது.
2. வியர்த்தால் உடல் எடை குறையுமா?
ஆம், உடல் எடை குறையும், ஆனால் அது தற்காலிகமானது. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் எடை இயந்திரத்தில் நின்று பார்த்தால், சில நூறு கிராம்கள் முதல் ஒரு கிலோ வரை எடை குறைந்திருப்பது போல காட்டும். ஆனால், இந்த எடை குறைப்பு என்பது உடலில் உள்ள கொழுப்பு கரைந்ததால் ஏற்பட்டது அல்ல, மாறாக உடலை விட்டு வெளியேறிய வெறும் நீர் இழப்பு மட்டுமே ஆகும்.
அறிவியல் பூர்வமான ஆதாரங்களின்படி, உடற்பயிற்சியின் போது வெளியேறும் வியர்வையில் 99% நீரும், மீதமுள்ள மிகச்சிறிய பகுதி உப்புகளும் (Sodium, Potassium) மட்டுமே உள்ளன. உடற்பயிற்சிக்கு பிறகு நீங்கள் உடனே இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாலோ அல்லது உணவை உட்கொண்டாலோ, உடலில் நீர்ச்சத்து மீண்டும் சமநிலைக்கு வந்துவிடும்.
இதனால் குறைந்த அந்த எடையும் சில மணி நேரங்களிலேயே பழைய நிலைக்குத் திரும்பிவிடும். இதனால், வியர்வை மூலம் ஏற்படும் எடை இழப்பை நிரந்தரமானது என்று கூற முடியாது.
4. வியர்த்தால் கலோரிகள் எரியுமா?
வியர்வை வருவதற்கும் கலோரிகள் எரிவதற்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. நீங்கள் ஒரு குளிர்ச்சியான ஏசி அறையில் அமர்ந்து தீவிரமான பளு தூக்கும் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; அங்கு குளிர்ச்சியாக இருப்பதால் உங்களுக்கு வியர்வை வராமல் இருக்கலாம். ஆனால் உங்களது தசைகள் கடினமாக உழைப்பதால் ஏகப்பட்ட கலோரிகள் எரிந்து கொண்டிருக்கும். மாறாக, நீங்கள் மதிய வெயிலில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் கூட உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டும், ஆனால் அங்கு தசை இயக்கம் இல்லாததால் கலோரிகள் எதுவும் எரியாது.
5. வியர்வையின் அளவை தீர்மானிக்கும் காரணிகள்:
ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் செய்யும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிக்கு கூட வியர்க்கும் அளவு மாறுபடும். இதற்கு பல காரணிகள் உள்ளன. முதலாவதாக, மரபணு ரீதியாக சிலருக்கு வியர்வை சுரப்பிகள் அதிகமாக இருக்கும். இரண்டாவதாக, சுற்றுப்புற சூழலில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது வியர்வை அதிகம் வெளியேறும். மூன்றாவதாக, அதிக உடல் எடை உள்ளவர்களின் பருமனான உடலைக் குளிர்விக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அவர்களுக்கும் வியர்வை அதிகமாக இருக்கும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மற்றவர்களை விட மிக வேகமாக வியர்க்கத் தொடங்கும். இதற்குக் காரணம், அவர்களின் உடல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து பழகியதால், வெப்பநிலையை எப்படி விரைவாகச் சமநிலைப்படுத்த வேண்டும் என்பதை மூளை முன்கூட்டியே கற்று வைத்திருக்கும். எனவே, வியர்வை அதிகமாகப் போவதைக் கொண்டு கலோரி அளவை கணக்கிட முடியாது; அது வெறும் உடலின் தற்காப்பு நடவடிக்கை மட்டுமே.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)