ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும்போது அங்கிருக்கும் தண்ணீரில் குளிப்பதனால் முடி கொட்டிவிட்டது என்று சிலர் கூறிக் கேள்விப்பட்டிருப்போம். இதற்குக் காரணம் உப்பு தண்ணீரில் அதிகமாகக் குளித்ததுதான் என்றும் சொல்வதுண்டு. உப்புத் தண்ணீரில் குளித்தால் முடிக்கொட்டிவிடும் என்று சொல்வதில் இருக்கும் உண்மைத்தன்மை என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பெரும்பாலான முடி உதிர்தலுக்கு முக்கியக் காரணம் வேர்களில் உள்ள பிரச்னையாகதான் இருக்கும். ஆண்களுக்கு தலை சொட்டையாவதற்குக் காரணம் ஹார்மோன் காரணங்கள் ஆகும். அதை Androgenic Alopecia என்று சொல்வார்கள். சிலருக்குத் திட்டு திட்டாக முடி கொட்டிய அடையாளம் இருக்கும். அதை autoimmune alopecia என்று கூறுவார்கள். சிலருக்கு வயதாவதால் முடி கொட்டும், சத்துக் குறைபாட்டால் முடி கொட்டும். இப்படி முடி கொட்டுவவற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
நம்முடைய தலையின் மேற்புறத்தில் இருந்து வேர் அமைந்திருக்கும் பகுதி வரை தண்ணீர் ஊடுருவாது. எனவே, உப்புத்தண்ணீரில் குளிப்பதால் முடி கொட்டுகிறது என்று சொல்வது காரணமாக இருக்க வாய்ப்பில்லை.
ஆற்று நீர், மழை நீர் போன்றவற்றை Soft water என்று சொல்வோம். இதில் calcium carbonate, magnesium sulphate போன்ற உப்புகள் குறைவாக இருக்கும். இதுவே, உப்புத் தண்ணீரை Hard water என்று சொல்லுவோம். இதில் உப்புகள் அதிகமாக இருக்கும். இந்த உப்புத் தண்ணீர் முடியில் படும்போது அதனுடைய Softness, elasticity ஆகியவை குறைந்து முடி உடைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
இதைத் தெரிந்துக்கொள்ள உப்பு தண்ணீரில் ஒரு குரூப் பெண்களின் முடியை எடுத்து 30 நாட்களுக்கு ஊற வைத்தும், இன்னொரு குரூப் பெண்களின் முடியை எடுத்து Distilled waterல் ஊற வைத்தும் பரிசோதித்துப் பார்த்ததில், உப்புத்தண்ணீரில் ஊற வைத்த முடியின் Strength 105 என்றும் Distilled waterல் ஊறவைத்த முடியின் Strength 103.6 என்றும் இருந்திருக்கிறது.
உப்புத்தண்ணீரில் ஊறவைத்த முடியின் Elasticity 37 என்றும் Distilled waterல் ஊறவைத்த முடியின் Elasticity 36.8 என்று இருந்திருக்கிறது. இவை இரண்டிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடி உதிர்வதற்கு ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். உப்புத் தண்ணீரில் குளிப்பது காரணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முடி கொட்டும் பிரச்னை இருந்தால் நல்ல சரும நோய் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்ததாகும்.