சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகப் பேசப்பட்டது, பலாக்காயில் இருந்து மாவு தயாரித்து அதை தினமும் உணவில் 30 கிராம் எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோய் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், பலாக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது என்பதுதான். இதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
100 கிராம் பலாக்காய் மாவில் 78 கிராம் மாவுச்சத்து உள்ளது, 16 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இதிலிருந்து 62 கிராம் மாவுச்சத்து நம் உடலுக்குக் கிடைக்கும். இதுவே, கோதுமை மாவில் 74 கிராம் மாவுச்சத்து உள்ளது, 12 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இதிலிருந்து 62 கிராம் மாவுச்சத்து நம் உடலுக்குக் கிடைக்கிறது. இது இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இதற்காக செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சர்க்கரை நோயாளிகள் ஒரு குரூப்பிற்கு சாதாரண கோதுமை மாவு வைத்து செய்யப்பட்ட சப்பாத்தியை கொடுத்திருக்கிறார்கள். இதுவே, இன்னொரு குரூப்பிற்கு பலாக்காய் 30 கிராம் கலக்கப்பட்ட கோதுமை மாவில் சப்பாத்தி செய்து கொடுத்திருக்கிறார்கள்.
12 வாரத்திற்கு தொடர்ந்து இதை செய்து அதன் முடிவில் HbA1c 0.25 சதவீதம்தான் வித்தியாசம் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். எனவே, பலாக்காய் மாவிற்கும், கோதுமை மாவிற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆகவே, பலாக்காய் மாவை எடுத்துக்கொள்வதால் சர்க்கரை நோய் முழுமையாக குணமாகும் என்று சொல்லப்படுவது உண்மையல்ல.
நம்முடைய இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், உணவில் மாவுச்சத்தை குறைத்துவிட்டு அதிகமாக புரதம், காய்கறிகள், கொழுப்புச்சத்தை அதிகரித்தாலே சுலபமாக சர்க்கரையை குறைத்து விடலாம்.
இதை விட்டுவிட்டு என்னவென்று தெரியாத புதிதாக டிரெண்டாகும் இதுபோன்ற மாவுகளை வாங்கி உண்பதால், எந்த ஒரு பெரிய மாற்றமும் நிகழப்போவதில்லை. இதற்கு பதில் சுலபமாக உணவு முறையில் மாற்றங்கள் செய்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.