வேலைக்குச் செல்லும் பலருக்கும் உடற்பயிற்சி செய்ய நேரம் இருப்பதில்லை. உடல் உறுப்புகளுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர்கள் ஸ்கிப்பிங் செய்யலாம். ஒட்டு மொத்த உடலுக்கும் சிறந்த பயிற்சியாக இது அமையும். தினமும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க காலையில் 15 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் செய்யலாம். ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் 1300 கலோரிகளை எரிக்க முடியும். ஸ்கிப்பிங் செய்வதால் உடலின் ஒவ்வொரு பகுதியும் வேலை செய்கிறது. கைகள், கால்கள், வயிறு, கழுத்து என உடலின் ஒவ்வொரு பகுதியும் குதிக்கும்பொழுது வேலை செய்கிறது.
வெறும் வயிற்றில் ஸ்கிப்பிங் செய்வதைத் தவிர்க்கவும். தளர்வான காட்டன் உடைகளை அணிந்து ஸ்கிப்பிங் செய்வது நல்லது. ஸ்கிப்பிங் குதிக்கும்பொழுது ஆரம்பத்தில் மெதுவாகவும் போகப்போக வேகத்தை சற்று கூட்டியும் செய்யலாம். பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஸ்கிப்பிங், உடற்பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது என்றே சொல்லலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு எரிக்கப்படுகிறது. அத்துடன் இவை சருமத்திற்கும், இதயத்திற்கும் சிறந்த பயிற்சியாகவும் அமைகிறது. இந்த பயிற்சியை செய்ய வெளியே செல்ல வேண்டியதில்லை. வீட்டில் எந்த இடத்திலும் நின்றுகொண்டு ஒரு கயிற்றை மட்டும் பயன்படுத்தி இதை செய்யலாம்.
ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்புகள் மென்மையாகிற நோய் தடுக்கப்பட்டு எலும்புகள் வலுவடைய உதவும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்னையும் குறையும். உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும்.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் சிறந்த கார்டியோ உடற்பயிற்சி இந்த ஸ்கிப்பிங் செய்வதுதான். ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுகள் வியர்வை மூலம் வெளியேறுகின்றன. இது தமனிகள் மற்றும் நரம்புகளில் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதுடன் உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.
உயரம் குறைந்த குழந்தைகள் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உயரமாக வளர முடியும். தினம் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைப்பதுடன் இடுப்பு வலியும் குறையும். முதுகெலும்பு பலம் பெறும். ஸ்கிப்பிங் செய்ய சாதாரண பிளாஸ்டிக் கயிறுகளை பயன்படுத்தக் கூடாது. தரமான ஸ்கிப்பிங் கயிறுகளை வாங்கி பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும்.
எப்படி செய்வது?
சமதளமான தரையில் ஸ்கிப்பிங் செய்யவும். மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் குதிக்க வேண்டும். தினமும் ஸ்கிப்பிங் செய்த பிறகு முழங்கால்கள், கணுக்கால்களை சிறிது மசாஜ் செய்யவும். விருப்பமான பாடல்களை கேட்டபடியே ஸ்கிப்பிங் செய்ய மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். முதுகுக்குப் பின் ஸ்கிப்பிங் கயிறு இருக்கும்படி ஸ்கிப்பிங் கட்டைகளை பிடித்துக்கொள்ள வேண்டும். மிதமான வேகத்தில் கைகளை சுழற்றி கயிற்றை முன்புறம் கொண்டு வர வேண்டும். அந்த நேரத்தில் மெதுவாக குதித்தபடி கயிறு கால்களில் மாட்டிக் கொள்ளாமல் பின்பக்கமாக கொண்டு வர வேண்டும். இப்படி ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் செய்து படிப்படியாக வேகத்தைக் கூட்ட வேண்டும். இது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வைத்துக்கொள்ள சிறந்த உடற்பயிற்சியாகும். ஸ்கிப்பிங் பயிற்சியை எங்கும் எப்போதும் செய்யலாம்.