

உணவுப்பொருளோ அல்லது வேறு ஏதாவது பொருளோ தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுப்பாதையில் தடை ஏற்படுவது சோக்கிங் (Choking) என்று கூறப்படுகிறது. மூச்சு விடுவதற்குத் தேவையான காற்று நுரையீரலுக்கு செல்வதை தடுக்கும் வகையில், உணவு அல்லது சிறிய பொருட்கள் சுவாசக் குழாயில் சிக்கிக் கொள்வதே சோக்கிங்(மூச்சு திணறல்) எனப்படும்.
1. அறிகுறிகள்
சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும். பேச முடியாமல் போகலாம். இருமல், சில சமயங்களில் உடல் நீல நிறமாக மாறுதல் குறிப்பாக உதடுகள், நகங்கள். மூச்சுத் திணறல் அறிகுறிகள் மிகவும் தீவிரமானவை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இதற்கான முதலுதவியை தெரிந்து வைத்திருப்பது நல்லது.
2. சோக்கிங்கை தவிர்ப்பது எப்படி?
உணவுப் பொருள் தொண்டையில் சிக்காமல் இருப்பதற்கு சாப்பிடும் போது எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது. அதேபோல் எந்த உணவையும் அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. இவை இரண்டுமே உணவுப் பொருளை தொண்டையில் சிக்க வைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். நாம் சாப்பிடுகின்ற எந்த உணவுப் பொருளுமே இப்படிப்பட்ட ஆபத்தை விளைவிக்கலாம்.
இதற்கு வயது வித்தியாசம் எதுவும் கிடையாது. ஆனாலும் சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவே சிறுவர்களாகட்டும், முதியவர்களாகட்டும் சாப்பிடும் பொழுது பேசிக்கொண்டே சாப்பிடுவதோ, அவசர அவசரமாக விழுங்குவதோ கூடாது.
உணவுத் திணறலை தவிர்க்க உணவை நன்றாக மென்று, சிறிய துண்டுகளாக உண்ண வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் கடினமான உணவுகளைத் தவிர்த்து, சிறிய துண்டுகளாக நறுக்கித் தரலாம். சிறிய பொருட்கள், பொம்மைகள், பலூன்கள் போன்றவற்றை குழந்தைகள் வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பதட்டம் காரணமாகவும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். அப்பொழுது ஆழ்ந்த சுவாசம் எடுப்பது நல்லது.
3. முதலுதவி
மூச்சுத் திணறல் ஏற்பட்டால் முதலுதவியாக அவசர சேவைகளை அழைத்து உதவி பெறலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹெம்லிச்(Heimlich) முதுகில் தட்டுதல்: நபரின் மார்பின் நடுவில் கையை வைத்து, தலையை முன்பக்கமாக சாய்த்து, ஐந்து முறை மெதுவாகத் தட்டவும்.
வயிற்று அழுத்தம்: பின்னர் நபரின் பின்னால் சென்று, நம் கைகளை வயிற்றின் நடுவில் வைத்து மேல்நோக்கி வேகமாக அழுத்தவும். இதை ஐந்து முறை செய்யவும்.
தொடர்ந்து செய்யவும்: பொருள் வெளியேறும் வரை இந்த ஐந்து முறை தட்டுதல் மற்றும் ஐந்து முறை அழுத்துதல் முறையைத் தொடரலாம்.
4. இருமலும், முதுகு தட்டலும்
இருமும் பொழுது சுவாசப் பாதையில் அடைத்துக் கொண்டிருக்கும் பொருள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பாதிக்கப்பட்டவர்களை முடிந்தால் தொடர்ந்து இரும சொல்லலாம். ஒருவேளை அவர்களால் இரும முடியவில்லை என்றால் அவருக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு, நெஞ்சுப் பகுதியை கைகளில் தாங்கிக் கொண்டு, அவரை இடுப்புப் பகுதி வரை குனிய வைக்க வேண்டும்.
பிறகு அவருடைய முதுகுபக்கத்தில் இரண்டு தோள்பட்டைகளும் சேரும் இடத்தில், உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக தட்டலாம். இப்படி செய்வதன் மூலம் தொண்டையில் அடைத்துக் கொண்டிருக்கும் பொருள் வெளியேற வாய்ப்பு அதிகம்.
குழந்தைகளுக்கு முதலுதவி செய்வது என்பது வேறுபடும். அதற்கு குழந்தைகளுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்வது பயனளிக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)