காதலர் தினம் என்பது அன்பையும் பாசத்தையும் கொண்டாட ஒதுக்கப்பட்ட நாள். இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்குவார்கள்.
காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைய தலைமுறையினர் இடையே அதிகரித்து வருகிறது. என்றாலும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை இந்தியாவில் திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காதல் தினம் தேவையா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும் நாடு முழுவதும் இந்த நாளை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். காதல் தின நாள் வருவதற்கு முன்பாகவே பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து காதலன் அல்லது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம்தேதி ‘வேலன்டைன்ஸ் டே’ கொண்டாடினால், தென் கொரியர்கள் மட்டும் வருடத்தில் 12 வேலன்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் 14ம் தேதி இவர்களுக்கு வேலன்டைன்ஸ் டேதான்!
‘வேலன்டைன்ஸ் டே’ என்ற பெயருக்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார், அவரது உயிர்த் தியாகம் இருக்கிறது. அவர் யார்?, அவரது தியாகம் எப்படிப்பட்டது என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
ரோம் நகரை இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய ராணுவ வீரர்கள் பலர் திருமணம் செய்ய தொடங்கியதால் குழந்தைகள் மீதும், மனைவி மீதும் அதிக அன்பு செலுத்தி வந்தனர். இதனால் ராணுவப் பணியில் அவர்களது கவனம் குறையத் தொடங்கியது.
இதை அறிந்த மன்னர், இனிமேல் ராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என உத்தரவிட்டார். இதனால் பலரும் அச்சப்பட்டனர். அந்த காலத்தில் தான் வேலன்டைன் எனும் பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவர் மன்னருக்கு தெரியாமல் காதலர்கள் பலருக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இந்த செய்தியை அறிந்த மன்னர் அவரை சிறையில் அடைத்து மரணதண்டனை கொடுத்தார்.
அடித்தே கொல்ல வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. ஆனால் அதற்கு பதிலாக அவரது தலையை வெட்டி கொலை செய்தனர். அவர் கொலை செய்யப்பட்ட நாள்தான் பிப்ரவரி 14. அதனால்தான் இந்த நாள் வேலன்டைன்ஸ் டே என அழைக்கப்பட்டது. இவ்வாறு மகிழ்ச்சியாய் கொண்டாடும் காதலர் தினத்துக்குள் ஒரு மனிதரின் உயிர்த் தியாகம் மறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.