
கண்கள் நாம் அனைவரும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டிய முக்கியமான உடல் உறுப்புகள். ஆனால், இவற்றை நாம் பொதுவாக கண்டு கொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினால் பலருக்கு கண் பார்வை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், சரியான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றியே முற்றிலும் இயற்கையான முறையில் அவற்றை நாம் மேம்படுத்த முடியும்.
பசலைக்கீரை, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் லுடின் மற்றும் ஜியாக்சான்டீன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது கண்களை தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இருந்து பாதுகாக்கிறது.
டியூனா, சால்மன் போன்று கொழுப்பு மீன்களில் ஒமேகம் 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், அவை விழித்திரையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இதனால் கண்கள் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, ராஸ்பேரி போன்ற பெர்ரி வகைகள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களின் சிறந்த மூலமாகும். இவை ஆரோக்கியமான பார்வையை மேம்படுத்த உதவும்.
உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்கும் என்றால், ப்ளீஸ் அதையாவது வாங்கி சாப்பிடுங்கள். அதில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இது கண் பார்வையை கூர்மையாக்குகிறது. மேலும், இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்களில் விட்டமின் சி அதிகம் இருக்கும். இது கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்து கொலாஜன் உள்ளிட்ட இணைப்பு திசுக்களை உருவாக்கி கண்ணை பராமரிக்க உதவுகிறது.
பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் இது வயது தொடர்பான கண் பாதிப்புகளைத் தடுத்து கண்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த உணவுகளை நீங்கள் தொடர்ச்சியாக உட்கொள்வதன் மூலம், உங்களின் கண்பார்வையை நீங்கள் இயற்கையாகவே மேம்படுத்த முடியும். இதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் கண் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், முறையான மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.