ஃபிரக்டோஸ் என்பது பழங்கள், காய்கறிகள் மற்றும் தேன் ஆகியவற்றில் இயற்கையாகவே காணப்படும் ஒரு வகை சர்க்கரை ஆகும். ஃபிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களால் சாதாரணமாக ஃபிரக்டோசை ஜீரணிக்க முடியாது. இது எதனால் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஃபிரக்டோஸ் சகிப்புத் தன்மையின் வகைகள்: ஃபிரக்டோஸ் சகிப்புத் தன்மையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. பரம்பரையாக வருவது மற்றும் மால் அப்சார்ப்ஷன் காரணமாக வருவது.
பரம்பரை ஃபிரக்டோஸ் (HFI) சகிப்புத்தன்மையற்றவர்கள் சந்திக்கும் விளைவுகள்: இது ஒரு அரிய மரபணுக் கோளாறு ஆகும். அல்டோலேஸ் பி என்ற நொதியின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இது ஃபிரக்டோஸின் சரியான வளர்ச்சிதை மாற்றத்திற்கு அவசியம்.
இந்த சகிப்புத்தன்மையற்ற குழந்தைகள் கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்த சர்க்கரை குறைதல் போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள். இதனால் காலப்போக்கில் ஃபிரக்டோஸ் சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே, இவர்கள் ஃபிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் சர்பிட்டால் கொண்ட உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, மாம்பழம், தர்பூசணி, அத்திப்பழம், திராட்சை, பேரிச்சை, ஹனி ட்யூ முலாம்பழம் மற்றும் பீச் ஆகியவை.
தவிர்க்க வேண்டிய காய்கறிகள்: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பட்டர் நட் ஸ்க்வாஷ், பீட்ரூட், இனிப்பு சோளம், கேரட் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும், சர்க்கரை உயர் ஃபிரக்டோஸ் உள்ள கார்ன் சிரப், தேன், நீலக் கத்தாழை சிரப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்கள், காய்கறிகள்: மிதமான அளவில் வாழைப்பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, சீமை சுரைக்காய், கீரை, புரோக்கோலி மற்றும் காலிஃப்ளவர்.
ஃபிரக்டோஸ் மால் அப்சார்ப்ஷன்: இது மரபணுக் கோளாறு போல அல்லாமல் குடலில் ஃபிரக்டோசை உறிஞ்சும் திறன் குறையும்போது நிகழ்கிறது. இதன் அறிகுறிகள் உடலில் வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் சோர்வு போன்றவை.
மரபணுக் கோளாறால் ஏற்படும் சகிப்புத்தன்மை, சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். உணவு முறை மாற்றங்கள் மூலம் இதை நிர்வகிக்கலாம்.
தவிர்க்க வேண்டிய பழங்கள், காய்கறிகள்: ஆப்பிள், பேரிக்காய், மாம்பழம், அன்னாசி, தர்பூசணி, தேன், கார்ன் சிரப் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவர்கள் வாழைப்பழங்கள், ஸ்ட்ராபெரி, அவுரி நெல்லிகள், ராஸ்பெரி, ஆரஞ்சு, எலுமிச்சை, அவகேடா, கீரை வகைகள், புரோக்கோலி, காலிஃப்ளவர், சுரைக்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஃபிரக்டோஸ் சகிப்புத் தன்மை அற்றவர்கள் மரபணு கோளாறுகள் மற்றும் மால் அப்சார்ப்ஷன் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
வெளியில் உணவு உண்ணுவதை பெருமளவில் குறைத்துக்கொண்டு வீட்டில் தயாரித்து உண்ண வேண்டும். ஃபிரக்டோஸ் குறைவாக உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கேரட், கீரை போன்ற காய்கறிகளையும் வாழைப்பழங்கள் பெர்ரி போன்ற பழங்களையும் இறைச்சி மற்றும் பால் பொருள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
எளிமையாகத் தயாரிக்கப்படும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உணவுப் பொருட்களை வாங்கும்போது அவற்றில் அதிக சர்க்கரைகளைக் கொண்ட சாஸ்கள், ட்ரெஸ்ஸிங் அல்லது மரினேட்களை தவிர்க்க வேண்டும்.