மாதவிடாய் நிறுத்தம் தொடங்கும் சராசரி வயது 47.5 ஆண்டுகள், ஆனால் அது இனம், மரபியல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளைப் பொறுத்து மாறுபடும். மாதவிடாய் நிறுத்தம் சராசரியாக 4 ஆண்டுகள் நீடிக்கும்.
உரிய காலத்திற்கு முன்பே ஏற்படும் மெனோபாஸ் பெண்களிடையே டைப் 2 சர்க்கரை நோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்கிறார்கள், கொரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். முன்னரே ஏற்படும் மெனோபாஸ் பெண்களிடையே டைப் 2 சர்க்கரை நோயை 13 சதவீதம் அதிகரிக்கிறது என்கிறார்கள். இது பொதுவாக 40 வயதில் மெனோபாஸ் நிலையை அடைகிறவர்களுக்கு பொருந்தும் என்கிறார்கள்.
50 வயதிற்கு முன்னால் மாதவிடாய் நின்று போகிற பெண்களுக்கு இதய நோய் தாக்கம், ஆன்ஜைனா நெஞ்சு வலி, ஸ்ட்ரோக் வரும் அபாயம் சராசரியை விட இரு மடங்கு அதிகம் என்கிறார்கள் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
10 பெண்களில் ஒருவர் தன்னுடைய 45 வயதிலேயே மெனோபாஸ் நிலையை அடைந்து விடுகிறார்கள். சரியான வயதிற்கு முன்னரே மெனோபாஸ் ஏற்படுவதால் அது அவர்களின் கருப்பையின் அளவை குறைப்பதுடன், அதில் உருவாகும் நல்ல ஹார்மோன்களின் பணியையும் முடக்கி விடுகிறது. அதனால்தான் அது பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படக் காரணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பெண்களின் மெனோபாஸ் காலம் தள்ளிப் போகிறதா? அவர்களின் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம் என்கிறார்கள் அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷன் ஆராய்ச்சியாளர்கள். 55 வயதிற்கு மேல் மெனோபாஸ் ஆரம்பித்த பெண்களுக்கு 44 சதவீதம் இதய வாஸ்குலர் இயக்கம் ஆரோக்கியமான நிலையில் இயங்குவதாக கண்டறிந்துள்ளனர். அதே வேளையில் 45 முதல் 54 வயதில் மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களில் பலர் இதயக் கோளாறுகளை சந்திப்பதாக கண்டறிந்துள்ளனர்.
பெண்களுக்கு மெனோபாஸ் காலம் வரும் காலகட்டத்திற்கு முந்தைய காலங்களில் அதிகப்படியான வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அவர்களில் 70 சதவீதம் பேருக்கு இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி ஆராய்ச்சியாளர்கள். அதிக வெள்ளைப்படுதல் பெண்கள் மனதில் சங்கடத்தை மட்டும் ஏற்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு இதயம் மற்றும் எலும்பு, மூளை நோய்களுடன் சம்பந்தப்பட்டதாகவும் எதிர்காலத்தில் மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
40 வயதுகளில் மெனோபாஸ் நிலையை அடைகிறவர்களுக்கு பொதுவாக மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். மேலும் ஆட்டோ இம்யூனின் நோய்கள், கருப்பை நீக்கம், நோய் தொற்றுக்கள், கிமோ தெரபி சிகிச்சை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
பொதுவாக புரதம் நிறைந்த உணவுகள், பருப்பு வகைகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். இதில் ஈஸ்ட்ரோஜன் சத்து அதிகம் இருக்கும். கிட்னி பீன்ஸ், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற அதிக புரத உணவை எடுத்துக் கொள்ளலாம். போதுமான தண்ணீர் குடித்தல், உடற்பயிற்சி போன்றவற்றால் மெனோபாஸின் விளைவுகளை சற்று சமன் செய்ய முடியும். சத்தான உணவின் மூலம் மொனோபாஸுக்கு முந்தைய அறிகுறிகளை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிறார்கள்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.