திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சேரன்மாதேவி அருள்மிகு ஶ்ரீ பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில், பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள்.
கட்டுமானம் மற்றும் காலம்:
தாமிரபரணி ஆற்றங்கரையில், பிற்கால பாண்டியர்களால், 1012-1044 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் கட்டப்பட்டது.
ஆலய அமைப்பு:
கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். கருவறையில், தேவியர் இல்லாமல் நம் பெருமாள் தனித்து நின்றிருப்பது போல, ஆலய பிரகாரத்தில் ஸ்ரீ பூமாதேவி மட்டும் திருக்காட்சியளிக்கிறார். ஏனைய பரிவாற மூர்த்திகளும் இடம்பெற்றுள்ளனர்.
ஆலயச் சிறப்பு:
வியாசரால் குறிப்பிடப்பட்ட சிறப்புமிக்க 12-கோயில்களில், ஒன்றாகும். உள்ளூர் மக்களை தவிர வெளியூர் மக்களால் அதிகம் அறியப்படாத இவ்வாலயத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் அற்புதமானவை. கலைநயம் மிக்கவை.
பிரார்த்தனை மற்றும் பரிகாரம்:
பிரகார மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமாகும். அசுப யோகத்தில் பிறந்து பல்வேறு குறைபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் ஆலயத்திற்கு வந்து நரசிம்மரை வேண்டி வழிபடுகின்றனர். குறைகள் தீர்ந்த பின்பு மீண்டும் வந்து பரிகார பூஜை செய்கிறார்கள்.
அமைவிடம்:
சேரன்மகாதேவி எல்லையில், பசுமையான வயல்களின் நடுவில் அமைந்துள்ள (கல்வெட்டுகள் நிறைந்த) இத்திருத்தலம், இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.
உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள்:
திருமாலுக்கு உகந்த முக்கியமான விழாக்கள் அனைத்தும் கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் பெருந்திருவிழாவாக நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் விழா வெகு விசேஷமாகும். பஞ்சாங்கம்’ என்பதிலுள்ள நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான்.
தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு. அத்தகைய யோகங்களில் சுபயோகம் அசுப யோகம் என்று இரண்டு வகை உண்டு அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.
இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலம் சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் , தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது.
அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது.
10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.