பச்சை இயற்கையை குறிக்க கூடிய ஒரு நிறமாகும். இது புத்துணர்ச்சி, வளர்ச்சி, ஆரோக்கியம், புதுப்பித்தல் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை குறிக்கிறது.
பச்சை நிறம் பல வழிகளில் உடல் நலனுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்நிறம் நமது மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. பச்சை நிறம் நமது புத்துணர்ச்சியைத் தூண்டி, நேர்மறையான எண்ணங்களை நம் மனதில் வளர்க்கிறது.
கீரை, பீன்ஸ், ஆப்பிள், திராட்சை போன்ற பச்சை காய்கறிகளும், பழங்களும், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்களைக் வழங்குகின்றன. பச்சை நிறத்தில் உள்ள உணவுகளில் காணப்படும் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நமது எலும்புகள், தசைநரம்புகள் மற்றும் இதர உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. பச்சை காய்கறிகள் செரிமானத்திற்கு உதவுவதுடன் மலச்சிக்கலையும் தடுக்கின்றன.
புதினா, துளசி போன்ற பச்சை நிற மூலிகைகள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால், அவை காய்ச்சல், தலைவலி, நெஞ்சுவலி, செரிமான கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்துகின்றன.
மனித உடலின் இரத்தத்தையும் உட்புற உறுப்புகளையும் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் மருத்துவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அவர்கள் பச்சை நிறத்தைப் பார்க்கும் போது அவர்களின் மூளை மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கணிணியின் திரையைப் பார்ப்பவர்கள் அடிக்கடி பசுமையான மரங்களைப் பார்ப்பது நல்லது.
நம் உடலின் சதைகள், எலும்புகள் பிற திசுக்களின் உயிரணுக்களில் அடிப்படையாக பச்சை நிறமுள்ளது. இது அமிலமாகவும், காரமாகவும் உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பச்சை நிறம் குளிர்ச்சியானது, மென்மையானது.
ஒரு ஆரோக்கியமான உணவான வெள்ளரிக்காய் பச்சை நிறத்துடன் இருக்கும் காய்கறியாகும். இதை வேக வைக்காமல் சாப்பிடலாம். இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை மட்டுமின்றி ஆக்ஸிஜனேற்றத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் இது உடல் நீரேற்றமாக இருக்க உதவுகிறது. இதனால் வெயில் காலங்களில் மக்கள் அதிகமாக வெள்ளரிக்காயை உண்கின்றனர்.
பச்சை பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதனுடன் வேர்கடலையை கலந்து சாலட் செய்யலாம். இது நமது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. கெட்ட கொழுப்பை நீக்குகிறது. மேலும் ,பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யவும். எடை இழப்பிற்கும் உதவுகிறது.
சுரைக்காயின் பழச்சாறுகளை அல்வா போன்ற இனிப்புகளில் சேர்க்கலாம். அது உடலுக்கு நன்மை பயக்கும். சுரைக்காய் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. இரத்தத்தை சுத்திகரித்தல் போன்ற நடவடிக்கைகளையும் இது செய்கிறது.
நெல்லி, கிவி, எலுமிச்சை இவை மூன்றுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டவை. இவற்றை நாம் சாறாகவும் குடிக்கலாம். அல்லது அப்படியே சாப்பிடுவது என்றாலும் சாப்பிடலாம். நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி-யை இவை அளித்து, நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. மேலும்,ஆண்டி ஆக்ஸிடண்ட்களாக செயல்படுகின்றன. இவை சரும ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவுகின்றன.
சோம்பு, சர்பத், போன்றவை கடும் வெப்பத்தை நாம் வெல்வதற்கு நமக்கு உதவுகின்றன. பெருஞ்சீரக விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பானங்கள் நமது செரிமான அமைப்பை வலுப்படுத்துகின்றன. மேலும் உடலை குளிரூட்டுகின்றன. வீக்கம் மற்றும் வாய்வு போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும் இவை உதவுகின்றன.
உண்ணாவிரதம் இருப்பவர்கள் பிஸ்தா மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உண்ணாவிரதத்திற்கு முன் ஒரு கைப்பிடி உண்ணலாம். பச்சை ஆப்பிளை சாறாகவோ அல்லது துண்டு துண்டாகவோ உண்ணலாம். இது அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பை கொண்ட பழமாக ஆப்பிள் உள்ளது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் நல்ல பார்வையை பெறுவதற்கும் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் உடல் எடை இழப்பிற்கும் ஆப்பிள் உதவுகிறது. எனவே இந்த பச்சை உணவுகளை பயன்படுத்தி நமது வாழ்வை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.