
பொதுவாக உருளைக்கிழங்கு , சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற மண்ணுக்கடியில் விளையும் உணவுப் பொருட்களில் வாய்வு அதிகம் எனும் கருத்து உண்டு. இதனால் இவற்றை தவிர்ப்பவர்களும் உண்டு. ஆனால் அளவோடு எடுக்கும் போது இவைகளால் கூடுதல் நன்மைகளை பெறலாம். மெனோபாஸ் முதல் எடை குறைப்பு வரை சேனைக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள் ஏராளம் . அதை பற்றி இங்கு காண்போம்.
தவிர்க்க காரணமும் தீர்வும்
மண்ணுக்கடியில் விளையும் பொக்கிஷமாக இருந்தாலும் சேனைக்கிழங்கின் அரிப்புத் தன்மையும், அதை விலக்க ஒரு காரணம் எனலாம். ஆனால் கைகளில் தேங்காய் எண்ணெயை தாராளமாக தடவிக்கொண்டு நறுக்கினால் அரிப்பைத் தடுக்கலாம் . மேலும் சேனைக்கிழங்கு முழுவதுமாக சுத்தம் செய்து நறுக்கி முடிக்கும் வரை நீரில் கை வைக்காமல் இருந்தாலும் அரிப்பு பரவாமல் இருக்கும். அடுத்து சேனைக்கிழங்கை வாங்கியதும் பயன்படுத்தாமல் அதை வாட வைத்து பயன்படுத்துவதும் அரிப்பை வரவிடாமல் தடுக்கும்.
சத்துக்களும் நன்மைகளும்
சேனைக்கிழங்கில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் நிறைந்து உள்ளன. இதைத்தவிர இதில் விட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மாங்கனிஸ் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது செரிமானத்துக்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிப்பதால் செரிமானம் எளிதில் நடைபெற்று அதன் விளைவாக குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரித்து ஆரோக்கியம் மேம்படுகிறது.
பெண்களுக்கு பெரும் பிரச்சனை தரும் மெனோபாஸ் அறிகுறிகளுக்கு நிவாரணம் தருகிறது சேனைக்கிழங்கு. பொதுவாக மெனோபாஸ் காலகட்டத்தில் குறையும் இந்த ஹார்மோன்கள் சேனைக்கிழங்கு எடுத்துக் கொள்ளும் பொழுது அதிகரித்து காணப்பட்டது என்றும், இது மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் அதிக நன்மைகள் தரும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சேனைக்கிழங்கு பசி உணர்வை கட்டுப்படுத்தி எடை இழப்புக்கும் உதவுகிறது . இதை உணவாக எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வைப் பெறுவீர்கள்.
மேலும் சில ஆய்வுகளின் படி சேனைக்கிழங்கில் உள்ள சேர்மங்கள் நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக குறிப்புகள் கூறுகிறது. இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன என்றாலும் இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் இன்னும் செயலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அசைவ உணவின் சுவை போன்ற இந்த சேனைக்கிழங்குகளை முறைப்படி சுத்தம் செய்து சமையலில் சேர்க்கலாம். சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து வெங்காயம் தாளித்து பொரியல் அல்லது மசாலாவுடன் எண்ணெயில் வறுவல் செய்து சாப்பிடலாம் . அதிக எண்ணெய் சேர்த்து சமைக்க விருப்பம் இல்லாதவர்கள் இதில் மசாலா தடவி தோசை சட்டியில் போட்டு வேக வைத்தும் சாப்பிடலாம். சேனைக்கிழங்கு சமைக்கும் போது சிறிதளவு புளி சேர்த்துக் கொண்டால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு ஏற்படாது என்பார்கள்.
இத்தகைய நன்மைகள் கொண்ட இந்த கிழங்கை வாரம் ஒரு முறை ஏதேனும் ஒரு உணவு முறையில் தவறாமல் சேர்த்து உண்டு வந்தால் நலத்தை பராமரிக்கலாம்.