
ஆற்றலைத் தரும் எனர்ஜி பானங்களை மக்கள் இன்று பரவலாக அருந்துகிறார்கள். இந்த பானங்களை குடித்தவுடன் உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் சோர்வில்லாமல் அதிக வேலையை செய்ய அல்லது உற்சாகமாக அன்றைய நாளை கழிக்க முடிகிறது. இந்த உடனடி ஆற்றல் பானங்களில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு கேடுகளை விளைவித்து ஒருவரின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். இந்த ஆற்றல் பானங்கள் இளம் வயதிலேயே ஒருவருக்கு சர்க்கரை நோயை கொண்டு வந்து விடுகிறது.
இன்றைய கால கட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்வு காலங்களில் இரவு நேரத்தில் கண் விழித்து படிக்கவும், தூக்கம் வராமல் இருக்கவும் உடனடி ஆற்றல் பானங்களைப் பருகுகின்றனர். அது போல விளையாட்டு வீரர்களும், உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களும் தங்களது நீடித்த நேர ஆற்றலுக்காக உடனடி ஆற்றல் பானங்களைப் பருகுகின்றனர்.
இந்த பானங்கள் உடலுக்கு உடனடியாக அதிகளவில் சக்தியை கொடுக்கின்றன. மேலும் உடலில் கலோரிகளின் அளவை அதிகரிக்கின்றன.
இந்த கலோரி அளவுகள் உடற்பயிற்சி அல்லது வேலைகளின் மூலம் எரிக்கப் படாவிட்டால், அது உடலின் சர்க்கரை அளவையும் கொழுப்பின் அளவையும் அதிகரிக்கும்.
மேலும் இந்த பழக்கம் ஒரு போதைப் பழக்கமாக மாறுகிறது. இது இளைஞர்களின் உடலில் பாதகமான மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆற்றல் பானங்களில் உள்ள சர்க்கரைகள் அதிக கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. மக்கள் ஆற்றல் பானங்கள் மூலம் அதிக கலோரிகளை உட்கொள்கிறார்கள்.
ஆனால், அது வயிறு நிரம்பிய உணர்வினை தராது. இதனால் மேலும் உணவினை ஒருவர் உட்கொள்ள வேண்டி இருக்கும். இதன் மூலம் உட்கொள்ளப்படும் கலோரியின் அளவு மேலும் அதிகரிக்கிறது. அவை உடற்பயிற்சியின் மூலம் எரிக்கப்படா விட்டால் சர்க்கரையாக மாறி விடுகிறது.
இந்த உடனடி ஆற்றல் பானங்களில் காஃபின், சர்க்கரை மற்றும் குரானா, டரைன் மற்றும் ஜின்ஸெங் போன்ற ஆற்றல் மூலங்கள் உள்ளன. இதை பருகுவதால் எதிர்காலத்தில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் சுவாச பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. இந்த பானங்களில் மிக அதிக அளவில் சர்க்கரை உள்ளது. அவை உடலில் இன்சுலின் உணர்திறன் குறைத்து இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன.
இதனால் இளம் வயதிலேயே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விடுகிறது. மேலும் எடை அதிகரிப்பு, ஹார்மோன் கோளாறுகளை உண்டாக்குகிறது.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இதுபோன்ற பானங்களைக் பருக வைக்கிறார்கள். இது சிறிது காலத்திற்குப் பிறகு எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. ஆற்றல் பானங்களில் உள்ள அதிகப்படியான காஃபின் , இதயத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக இளைஞர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆற்றல் பானங்களில் உள்ள அதிக காஃபின் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆற்றல் பானங்கள் கடுமையான நீரிழப்பு மற்றும் இரைப்பை குடல் நோயை உண்டாக்குகிறது. இதில் உள்ள காஃபின் மற்றும் சர்க்கரை குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கிறது. காஃபின் பெருங்குடலை அதிகமாகத் தூண்டி, வயிற்றுப்போக்கை உண்டாக்கும். மேலும் நரம்பு மண்டலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தலைவலி, எரிச்சல், பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடனடி ஆற்றல் பானங்களை அடிக்கடி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.