
கட்டுடலுக்காக அதிக புரதம் எடுத்துக் கொண்ட இளைஞர்கள் மரணத்தை தழுவிய செய்திகளை காணமுடிகிறது. அதிக புரதம் உயிருக்கு ஆபத்தை தருமா? இந்தப் பதிவில் காண்போம்.
புரதங்கள் நமது உடலுக்கு மிக அத்யாவசியமானவை. குறிப்பாக ஆற்றலை உருவாக்கும் வேதியியல் செயல்முறைகளில் ஈடுபடும் மிகவும் சிக்கலான அமினோ அமிலங்களால் ஆனது. பல்வேறு வகையான புரதங்கள் இருந்தாலும் நம் உடலின் உறுப்புகள் அனைத்திற்கும் ஒன்று போல் செயல்படுவதில்லை.
நல்ல தசை வளர்ச்சி மற்றும் உடற்கட்டு விரும்பும் பலர் அதிக புரத உணவை முறையற்ற அளவில் எடுத்துக்கொள்வது உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. நன்மை தரும் எதையும் அதிகமாக உட்கொள்வது மோசமானது மற்றும் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
அதிக புரதம்/குறைந்த கார்ப் உணவுகள் எடை இழப்பு நுட்பமாகவும் கருதப்படுகின்றன, மேலும் பலர் தற்போது மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் விளம்பரங்கள் மூலம் அறியும் பலவகை புரதங்களை சப்ளிமெண்ட் உணவாக எடுத்துக் கொள்வது பிரபலமாகி வருகிறது.
பொதுவாக புரத உட்கொள்ளல் கார்போஹைட்ரேட்டுகளை விட மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அதிக அளவு புரதத்தை உட்கொள்ளும் நபர்களின் வளர்சிதை மாற்றம் கெட்டோசிஸ் எனப்படும் நிலைக்கு மாறுகிறது, அதாவது உடல் எரிபொருளுக்காக கார்போஹைட்ரேட்டுகளை எரிப்பதில் இருந்து அதன் சொந்த கொழுப்பை எரிப்பதாக மாறுகிறது.
கீட்டோசிஸ் பசியை அடக்குவதால் குறைவாக சாப்பிடத் தொடங்கி நீரிழிவு நோய் ஏற்படவும் உடலின் திரவங்களை சீராக வெளியேற்றுவதிலும் பாதிப்பு தருகிறது. இதன் விளைவாக உடலின் நீர் எடை குறைகிறது.
அதிக புரதம் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும்?
அளவுக்கு அதிக புரத உட்கொள்ளல் சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், இது சிறுநீரக பாதிப்பை அதிகமாக்கும்.
சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும், போதுமான திரவ உட்கொள்ளலுடன் சமநிலைப்படுத்தப்படாவிட்டால் நீரிழப்பு ஏற்பட்டு கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும், இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும்.
அதிக புரத உணவு கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.
விலங்குகள் மூலம் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் அதிக புரத உட்கொள்ளல், புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றன.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் சிரமம் தவிர்க்க புரத உட்கொள்ளலில் கவனம் தேவை. அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளுடன் இருக்கும் வயதானவர்கள், கல்லீரல் நோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற சில முக்கிய மருத்துவ பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் அதிக புரத உட்கொள்ளலின் எதிர்மறை விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
சரி எப்படி புரத உணவுகள் எடுப்பது நலம் தரும்?
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட பல்வேறு முழு உணவுகளை உள்ளடக்கிய பிற ஊட்டச்சத்துகளுடன் சமநிலையில் சீரான உணவை முறைப்படுத்துங்கள். அன்றாட உணவில் பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் கொட்டைகள் போன்ற இயற்கை தாவர அடிப்படையிலான உணவு புரதத்தை வழங்குவதோடு அபாயங்களையும் குறைக்கும்.
உடல் புரதத்தை செயலாக்கவும், நீரிழப்பு அபாயத்தைக் குறைக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும். முக்கியமாக புரத உட்கொள்ளல் அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகள் குறித்த சந்தேகத்தை குடும்ப மருத்துவர் அல்லது பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்கத் தவறாதீர்கள். அளவுக்கு மீறிய எதுவும் உடலுக்கு நஞ்சாக மாறி ஆபத்தையே தரும்.