நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பற்களின் ஆரோக்கியமே அடிப்படை. சீரான செரிமானம் வாயிலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது. உட்கொள்ளும் உணவை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து விழுங்கும்போது இரைப்பை மற்றும் குடலின் வேலை சுலபமாகிறது. இதற்கு நாம் பற்களை ஆரோக்கியத்துடன் பராமரித்து வருவது அவசியம். அதற்கு நாம் என்னென்ன உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஆப்பிள்: ஆப்பிளை தோலுடன் கடித்து மெல்லும்போது அதன் க்ரன்ச்சி டெக்ச்சரானது பற்களை சுத்தப்படுத்தவும், உமிழ் நீர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும். வாயில் உள்ள அமிலத்தின் அளவை சமநிலைப்படுத்தும். இதனால் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமடையும்.
2. கேரட்: கேரட்டில் உள்ள வைட்டமின் A ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உமிழ் நீர் உற்பத்தியின் அளவை அதிகரிக்கச் செய்யவும் உதவும். இதனால் பற்களிடையே தங்கியிருக்கும் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். பற்களின் எனாமல் பாதுகாப்புப் பெறும்.
3. பசலை(Spinach): பசலைக் கீரையில் உள்ள கால்சியம் மற்றும் ஃபொலேட் சத்துக்கள் பற்களை வலுவடையச் செய்யும். பசலையிலுள்ள நார்ச் சத்துக்கள் இயற்கை முறையில் பற்களையும் ஈறுகளையும் சுத்தம் செய்ய உதவும்.
4. சீஸ்: சீஸிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்ஃபேட் சத்துக்கள் பற்களின் எனாமலை வலுவாக்கும். மேலும், வாய்க்குள் சுரக்கும் அமிலத்தின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரித்து, பற்களில் சொத்தை மற்றும் பற்சிதைவு போன்ற கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கவும் செய்யும்.
5. யோகர்ட்: யோகர்ட்டிலுள்ள ப்ரோபயோட்டிக்குகள் மற்றும் கால்சியம் சத்துக்கள் பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மேலும், இவை பற்களில் சொத்தை உண்டாகும் அபாயத்தைத் தடுக்க உதவிபுரிகின்றன. வாய்க்குள் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் இவை உதவும்.
6. க்ரீன் டீ: க்ரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வாய்க்குள்ளிருக்கும் தீமை தரும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி பற்சிதைவு உண்டாகாமல் பற்களைப் பாதுகாக்கின்றன. மேலும், வாய் துர்நாற்றத்தையும் ஈறு நோய்களையும் தடுத்து நிறுத்த உதவிபுரிந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்கின்றன.
7. நட்ஸ்: ஆல்மன்ட், முந்திரி போன்ற தாவரக் கொட்டை வகைகளில் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை பல் எனாமலின் ஆரோக்கியம் மேம்படவும் பற்களின் கனிமச் சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் சிறந்த முறையில் உதவி புரிகின்றன.
8. தண்ணீர்: நாள் முழுக்க அடிக்கடி தண்ணீர் அருந்துவது வாய்பகுதியை நீரேற்றத்துடன் வைக்க உதவும். மேலும் வாய்க்குள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுப் பொருள்கள்கள் வெளியேறவும் உதவும். வாய்க்குள் சுரக்கும் அமிலத்தின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், ஒட்டுமொத்த வாய்ப் பகுதியின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் தண்ணீர் உதவி புரியும்.
மேற்கூறிய உணவுப் பொருட்களை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்பதுடன், பற்களை நன்கு பிரஷ் பண்ணவும், ஃபிளாஸிங் (Flossing) முறையில் பற்களுக்கு இடையில் மாட்டியிருக்கும் உணவுப் பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்தவும் செய்தால் ஈறுகளில் கோளாறு மற்றும் பற் சொத்தை உண்டாவது தடுக்கப்படும். வாயிலிருந்து துர்நாற்றம் வராது.
குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத்துவமனைக்கு சென்று பற்களை மருத்துவர் உதவியால் பரிசோதித்துக் கொள்வதும் அவசியம். இதனால் பற்சிதைவு மற்றும் ஈறுகளில் கோளாறு உண்டாகும் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்திக்கொள்ள வசதியாகும்.