நம் உடல் வெப்பநிலை மற்றும் உடல் செயல்பாடுகளை சீராக்க உதவும் தைராய்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். சில சிற்றுண்டிகள் தைராய்டுக்கு மிகவும் ஏற்றவை. தைராய்டு காரணமாக நிறைய முடி உதிர்வும் இரும்புச் சத்து குறைபாடும் ஏற்படும். அத்துடன் எடையை கட்டுப்படுத்தவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் சில உணவுகளை சேர்த்துக்கொள்வதும் சிலவற்றை தவிர்ப்பதும் சிறந்தது.
வெண்ணெய் பழம்: ஆன்டி அர்ஜென்ட்கள் நல்ல கொழுப்புகள் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்ணெய் பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
வேகவைத்த பச்சைப்பயிறு: அயோடின் மற்றும் நார்ச்சத்து உள்ளது பச்சைப்பயிறு. புரதச்சத்து நிறைந்த பச்சை பயிரை சுண்டலாக அல்லது சைட் டிஷ் ஆக சமையலில் சேர்த்து பயன்படுத்தலாம்.
மாதுளை முத்துக்கள்: இதய ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம் மற்றும் சிறந்த இரத்த ஓட்டத்திற்கு மாதுளை முத்துக்கள் அவசியம். இதனை வாரத்திற்கு இரண்டு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: நார்ச்சத்தும், ஜிங்க்கும் நிறைந்துள்ளது பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள். இவை குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகின்றன.
கொண்டைக்கடலை: இரும்புச் சத்து, புரதச்சத்து நிறைந்த கொண்டைக்கடலையை ஊற வைத்து முளைகட்டி சுண்டலாக எடுத்துக் கொள்ளலாம்.
கிரீன் டீ: இதில் கேடசின்கள் நிறைய உள்ளன. இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகும். அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும், வெளியேற்றவும் உதவுகிறது.
புரோக்கோலி: இதில் கால்சியம், வைட்டமின் சி அதிகம் உள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இது உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த தைராய்டு பிரச்னைக்கு நன்மை பயக்கும் புரோக்கோலியை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
இவை தவிர, பிரவுன் ரைஸ், ஓட்ஸ், முளைத்த தானியங்கள் மற்றும் குயினோவா ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி தைராய்டு சுரப்பிக்கு உதவும். தயிர் தைராய்டு சுரப்பிக்கான சிறந்த உணவுகளில் ஒன்று. பால் பொருட்களில் முக்கியமாக தயிர் மிகவும் சத்தானது. உடலின் அயோடின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. இளநீர், நெல்லிக்காய், பிஸ்தா போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். கறிவேப்பிலையில் தாமிரம் சத்து உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வர தைராய்டு பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
தைராய்டு குறைவாக இருந்தால் அயோடின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். தைராய்டு பிரச்னைகளை உணவு முறையால் மட்டும் குணப்படுத்த முடியாது. மருத்துவரின் ஆலோசனைப்படி தைராய்டு ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியம். தைராய்டு சுரப்பிக்கான சிறந்த உணவுகள் என்று பார்த்தால் பழங்களில் ஆப்பிள், பேரிக்காய் மற்றும் சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். துத்தநாக சத்து நிறைந்த பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் கொட்டைகளை சாலட்களில் சேர்த்து உண்ணலாம்.