

உடலியக்க நிபுணர்களான லாயிட் பெர்செவல் மற்றும் ஜேன் பெர்பெர்செவல் உடற்பயிற்சி செய்வது பற்றி என்ன கூறுகிறார்கள்?
நாம் உடற்பயிற்சி செய்தால் எடை குறையும் என்று எண்ணுகிறோம் . ஒவ்வொரு உறுப்புகளிலும் உள்ள கொழுப்பு கரையும் என்று நினைக்கிறோம். அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்ன என்பதை இதில் காண்போம். (exercise myths)
எந்த வயதில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?
இதற்கென தனியாக வயது வரம்பு கிடையாது. சிறு குழந்தையாக இருக்கும் பொழுது உடற்பயிற்சியை விளையாட்டாக தினசரி வாழ்வில் புகுத்தி விட வேண்டும். எந்த வயதினராக இருந்தாலும் உடற்பயிற்சி என்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் கண்கூடாக காணலாம் என்று கூறுகின்றனர்.
இதயம் மற்றும் ரத்த ஓட்டம் இவற்றிற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள தொடர்பு என்ன?
உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றையும் குறைக்க வல்லது. ரத்தம் உறைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதயச் தசைகளுக்கு வலுவூட்டி இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. நொதிகள் மற்றும் ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுக்குள் வைக்கிறது.
ஒவ்வொரு உறுப்புகளிலும் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான பிரத்தியேகமான உடற்பயிற்சிகள் இல்லை. கொழுப்பு எல்லா பகுதிகளில் இருந்தும் குறிப்பிட்ட விகிதத்தில் தான் கரைகிறது. உடலின் மேற்பரப்பில் உள்ள சதையானது கீழ் உள்ள சதையை காட்டிலும் விரைவாகக் குறைந்து விடுகிறது என்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் முதுமையை தடுக்க முடியுமா?
முடியாது. உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் செய்யாத 30 வயதுடைய இளைஞரைக் காட்டிலும், தினசரி உடற்பயிற்சி செய்து வரும் 60 வயது பெரியோரின் நிலை நல்ல செயலோடும், வடிவோடும் இருக்கும். உடற்பயிற்சியின் மூலம் உடல் இயக்கத்தில் பிற்காலத்தில் நிகழக்கூடிய சீர்கேடுகளை ஓரளவு ஒத்திப் போட முடியுமே தவிர இயல்பாக வயதாவதைத் தடுக்க முடியாது என்கின்றனர்.
கருவுற்றிருக்கும் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா?
இயல்பான வகையில் கருவுற்றிருக்கும் பெண்களை பொருத்தமட்டில் உடற்பயிற்சி செய்வது தான் நல்லது. இது குழந்தை வளர்ச்சியையும், பால் சுரப்பினையும் மென்மேலும் அதிகரிக்க உதவுகிறது. ஆனால் மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யாமல் உணவு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றுவதால் மட்டுமே எடையை குறைக்க முடியுமா?
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது மட்டுமே கொழுப்பு குறைகிறது. எவ்வளவு கவனமுடன் உணவு கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றினாலும் ஓரளவேனும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளில் நீச்சல், நடைபயிற்சி தினசரி 40 முதல் 60 நிமிடங்கள் வரை செய்து வந்தால் 300 கலோரிகள் வரை செலவாகிறது. எனவே மிகுதியாக உள்ள கொழுப்பு உடலில் சேர்வது தடுக்கப்படுகிறது என்கின்றனர்.
உடற்பயிற்சி செய்யும் பொழுது அதிகம் வியர்த்தால் அதிக எடை இழப்பு ஏற்படுமா?
வியர்க்கின்ற பொழுது உடலில் உள்ள திரவம் குறைகிறது. உடற்பயிற்சி செய்த பின் எடை குறைந்தது போல் தோன்றினாலும் சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு வந்துவிடும். உடற்பயிற்சி செய்யும் போது அதற்கு முன்னும் பின்னும் போதிய அளவு நீர் அருந்த வேண்டும் என்கின்றனர்.