மலத்தையும் மருந்தாக்கும் மருத்துவம்: நோய்களை விரட்டும் விசித்திர சிகிச்சை!

நவீன மருத்துவத்தின் புதிய மைல்கல்: குடல் நோய்களை குணமாக்கும் மலம் மாற்று சிகிச்சை முறை.
Fecal Transplant | மலம் மாற்று சிகிச்சை
Fecal Transplant | மலம் மாற்று சிகிச்சை
Updated on

'உன்னையே நீ அறிவாய்' என்பதே உலகப் புகழ் வாய்ந்த கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீசின் அடிப்படை தத்துவம். இன்னும் மனிதனால் தன்னையே முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. எத்தனையெத்தனை ஆச்சரியங்களை நம் உடல் தன்னுள்ளே வைத்துள்ளது!

  • நூறாண்டுகள் வரை கூட 'ஓவர் ஹாலிங்' (முழுமையான சீரமைப்பு) செய்யாமலே ஓடுகின்ற பம்ப் ஏதும் உலகில் இருப்பதாகத் தெரியவில்லை - ஆனால் மனித இதயம் ஓடிக் கொண்டுதானே இருக்கிறது! அதை நிறுத்தியோ, வெளியில் கழற்றியோ ரிப்பேர் செய்வதில்லையே! - செய்யவும் முடியாதே!

  • காற்றால், நீரால் மனித உடல் குளிர்ச்சியடைகிறது. இதனை அறிந்துதானோ விஞ்ஞானிகள் 'ஏர் அன்ட் வாடர் கூலர்' எஞ்சின்களைக் கண்டு பிடித்தார்கள்!

  • காமிரா லென்ஸ்கள் கண்டு பிடிக்கப்பட்டு வளர்ச்சி பெற்றதால் திரைப்படங்கள் முன்னேற்றம் பெற்று 3டி, 4டி (3D,4D) நுணுக்கங்களையும் பெற்றன. சிறுவர்களும் இன்று கைபேசியிலேயே வீடியோ எடுக்கிறார்கள். ஆனாலும் மனிதக் கண்களுக்கு இணையான லென்ஸ்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

  • உடலின் தன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வரும் மருத்துவர்கள் முகத்திலோ வேறு இடத்திலோ உடலின் மிகப்பெரும் உறுப்பான தோலுக்குப் பங்கம் விளைந்தால், தொடையிலிருந்து தோலை எடுத்து ஒட்டும் உன்னத மருத்துவத்தை அறிமுப்படுத்தி, தொடர்ந்தும் வருகிறார்கள்.

  • உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் உலகம் முழுவதும் உயிர்ப்புடன் வளர்ந்து வருகின்றன.

  • இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பழுதாகும்போது இரத்தத்தை வெளியே கொண்டு வந்து சுத்தப்படுத்தி உட்செலுத்துவது (Dialysis) சாதாரண நிகழ்வாகி வருகிறது.

  • வந்தால் உயிரோடுதான் போகும் என்று உலகோர் பயந்திருந்த கேன்சரைக் கூட இன்று மருத்துவர்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்திய அவர்களின் அறிவிப்பு, வியப்பு மிக்கதாக அமைந்துள்ளது.

ஆம்! மனித மலத்தையும் மருந்தாக்கும் வைத்திய முறைதான் அது! ஏற்கனவே மனித மலத்தை எருவாக்கிச் செடிகளுக்கு இடும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இப்பொழுது மருந்தாகிறது. எப்படி என்று பார்ப்போம்.

நமது உடலில் நல்ல கொழுப்பும், கெட்ட கொழுப்பும் இருப்பதைப் போலவே, உடம்புக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவும் தீங்கு விளைக்கும் பாக்டீரியாவும் இருக்கின்றன. அவை நமது குடலில்தான் வாழ்கின்றன. குடலில் ஏற்படும் கடுமையான தொற்றுக்களை அகற்ற, ‘மலம் மாற்று சிகிச்சை’யைத் தற்கால மருத்துவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். மனித உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும், ஆன்டிபயாடிக்குகளுக்கும் அடங்காத, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கத்தை ஏற்படுத்தும் ‘க்ளாஸ்ட்ரிடயோட் டிபிசிள்’ (Clostridioides difficile (C diff) என்ற பாக்டீரியா தொற்றுக்கு இச்சிகிச்சைதான் சிறந்த தீர்வாக அமைகிறதாம்!

Fecal Transplant | மலம் மாற்று சிகிச்சை
Fecal Transplant | மலம் மாற்று சிகிச்சை

சிகிச்சை முறை:

நமது உடலிலுள்ள நன்மை செய்யும் மற்றும் தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு, தொற்றுக்கள் உண்டாகின்றன. மருந்துகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதபோதுதான் இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நல்ல ஆரோக்கியமுள்ள ஒருவரின் மலத்திலிருந்து நன்மை செய்யும் பாக்டீரியாக்களைப் பிரித்தெடுத்து, அவற்றைக் குடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொருவரின் குடலுக்குள் செலுத்துவதே இதன் அடிப்படை.

இதையும் படியுங்கள்:
மனித மூளையின் ரகசியங்கள்: 200 மில்லி செகண்டில் நடக்கும் விந்தை!
Fecal Transplant | மலம் மாற்று சிகிச்சை

உடலில் எந்த நோயோ,தொற்றோ இல்லாத, முழுமையான நலத்துடன் இயங்கும் மனிதரின் மலத்தைச் சேகரித்து அதனை ஆய்வகத்தில் முறையாகச் சுத்திகரித்து, கோலனாஸ்கோப்பி மூலமோ அல்லது சிறப்பு மாத்திரைகள் மூலமோ தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடலுக்குள் செலுத்துகிறார்கள். நோய்வாய்ப் பட்டவரின் குடலுக்குள் செல்லும் நல்ல பாக்டீரியாக்கள் நோயை விரட்டும்.

நவீன மருத்துவ உலகம் பல மகத்தான சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதே சமயம் புதுப்புது நோய்களும், தொற்றுக்களும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. கோவிட் 19 சமீபத்திய உதாரணம். அடிக்கடி பல கிருமிகளின் ஆதிக்கம் ஏற்பட்டு, அகிலத்தை ஆட்டி வைக்கின்றன. அவற்றை ஒடுக்கும் மருந்துகளை ஆய்வாளர்கள் அவசரம் அவசரமாகக் கண்டு பிடித்துக் களத்திற்குக் கொண்டு வந்தாலும், அதற்குள் அவை பலரைப் பலி வாங்கிச் சென்று விடுகின்றன.

மருத்துவர்களின் உதவியோடு நாமும் உணவில், உடற்பயிற்சியில் நாட்டம் செலுத்தி ஆரோக்கிய வாழ்வை நமதாக்கிக் கொள்ள வேண்டும்.

அதே சமயம், மலம் மாற்று சிகிச்சை வரை மருத்துவ உலகம் முன்னேறியுள்ளதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
10 நிமிட இயற்கை சிகிச்சை: மன அழுத்தத்தைப் போக்கி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழி!
Fecal Transplant | மலம் மாற்று சிகிச்சை
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com