
தலசீமியா என்றால் என்ன?
தலசீமியா என்பது ஒரு மரபு வழி ரத்தக் கோளாறாகும். பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலம் பரவுகிறது. இந்தக் கோளாறு உள்ளவர்களின் உடல், இயல்பை விட குறைவான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. இதனால் ஆரோக்கியமான ரத்த சிவப்பு அணுக்கள் குறைந்து இரத்த சோகை ஏற்படுகிறது.
தலசீமியா ஏற்பட காரணங்கள்:
ஹீமோகுளோபின் என்பது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரதம் ஆகும். ஹீமோகுளோபினை உருவாக்கும் செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்களால் தலசீமியா ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் ஆல்ஃபா மற்றும் பீட்டா சங்கிலிகள் எனப்படும் புரத சங்கிலிகளால் ஆனவை. இவை மரபணு மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு ஆல்ஃபா தலசீமியா அல்லது பீட்டா தலசீமியா ஏற்படுகிறது.
தலசீமியா ஏற்பட முக்கியமான காரணம் நெருங்கிய உறவுகளுக்குள் செய்யப்படும் திருமணங்கள். ஏனென்றால் மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் மூதாதையரிடமிருந்து குறைபாடுள்ள மரபணுவைக் கொண்டிருக்கலாம்.
இதனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தலசீமியா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். தலசீமியாவின் லேசான பாதிப்பு இருந்தால் சிகிச்சை தேவையில்லை. ஆனால் தீவிரமாக இருந்தால் இரத்த மாற்றம் செய்ய வேண்டி வரும்.
கடுமையான தலசீமியாவின் அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், சரும நிறத்தில் மாற்றம், கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், முக எலும்புகளில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிரச்னைகள், அடர் நிறத்தில் வெளியேறும் சிறுநீர், பசியின்மை வயிற்றுப் பகுதியில் வீக்கம் போன்றவை. சில குழந்தைகள் பிறக்கும்போதே தலசீமியாவால் பாதிக்கப்பட்டு பிறக்கிறார்கள். பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும் மரபணு மாற்றங்களால் இந்த நிலை ஏற்படுகிறது.
தலசீமியாவின் நீண்டகால சிக்கல்கள் என்ன?
இரும்புச்சத்து அதிகரிப்பது:
தலசீமியா உள்ளவர்களுக்கு அடிக்கடி ரத்தம் ஏற்றப்படுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கலாம். அதிகப்படியான இரும்புச்சத்து இதயம் மற்றும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இது ஹார்மோன்களை உருவாக்கி வெளியிடும் சுரப்பிகளையும் பாதிக்கும்.
தொற்று:
தலசீமியா உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும். குறிப்பாக அவர்களுக்கு மண்ணீரல் அகற்றப்பட்டிருந்தால் தொற்று அதிகமாக ஏற்படும்.
எலும்புகளில் பாதிப்பு:
தலசீமியா எலும்பு மஜ்ஜை எனப்படும் எலும்புகளுக்குள் இருக்கும் பஞ்சு போன்ற திசுக்களை விரிவடைய செய்கிறது. இதனால் ஒழுங்கற்ற எலும்பு அமைப்பு ஏற்படும். குறிப்பாக முகம் மற்றும் மண்டை ஓட்டில் எலும்பு மஜ்ஜை விரிவடைவதால் எலும்புகள் மெல்லியதாகவும் எளிதில் உடையக் கூடியதாகவும் மாறுகிறது.
பெரிதாக்கப்பட்ட மண்ணீரல்:
மண்ணீரல் என்பது உடல் தொற்று நோயை எதிர்த்துப் போராட உதவும் ஒரு உறுப்பாகும். இது பழைய அல்லது சேதமடைந்த ரத்த அணுக்களை அகற்றவும் உதவுகிறது. தலசீமியா பாதிப்புள்ளவர்களின் மண்ணீரல் பெரிதாகி வழக்கத்தை விட கடினமாக உழைக்கிறது. விரிவடைந்த மண்ணீரல் ரத்த சோகையை அதிகரிக்கும். ரத்தமாற்றத்தின் போது பெறப்பட்ட ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுளையும் குறைக்கும். எனவே மண்ணீரல் மிகப் பெரிதாக வளர்ந்தால் அறுவை சிகிச்சை செய்ய நேரிடலாம்.
கல்லீரல் நோய்:
நாள்பட்ட ஹெபடைடிஸ், ஃபைப்ரோசிஸ் மற்றும் அரிதாக இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் கல்லீரல் புற்றுநோய்.
நாளமில்லா சுரப்பி கோளாறுகள்:
நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் தாமதமாக பருவமடைதல், பித்தப்பையில் கற்கள் மற்றும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். தலசீமியா பாதிப்பு உள்ள பெரியவர்களுக்கு புற்று நோய்களின் அதிகரிப்பு நேரலாம். வயிற்றில் வீரியமிக்க கட்டிகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் தலசீமியாவால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பும் வளர்ச்சிக் குறைபாடும் உண்டாக்கும்.
தலசீமியா என்பது முதன்மையாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வரும் ஒரு மரபணுக் கோளாறு என்பதால் இதை முழுமையாக தவிர்க்க முடியாது. எனவே நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இதனால் தலசீமியா கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.