சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் படுக்கையில் இருந்து எழும்போது தலைசுற்றல் வரலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்த பின்பு எழுந்து நிற்கும் போதும், சிலருக்கு தலைசுற்றுவது போல இருக்கும். பொதுவாக து 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இப்படி நேரலாம். அபூர்வமாக சில இளம் வயதினருக்கும் இது வரலாம். இதற்கு முக்கியக் காரணம் அவர்களின் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகள்தான். இதைத் தவிர்க்கும் வழிமுறைகளை இந்தப் பதிவில் காணலாம்.
1. மெதுவாக எழுந்திருக்கவும்: நாற்காலியில் இருந்தோ, படுக்கையில் இருந்தோ எழும்போது திடீரென்று எழுந்து நிற்கக்கூடாது. அப்போது கால்களிலிருந்து இதயத்திற்கு இரத்தம் பாயும் வேகம் அதிகரிப்பதால் தலை சுற்றலும், மயக்கமும் வரும். எனவே, பொறுமையாக, மெதுவாக எழுந்து நிற்கவும்.
2. நீண்ட நாட்களாக சாப்பிடும் மருந்து கூட ஒரு காரணம்: சில மருந்துகளை நீண்ட காலமாக எடுப்பவராக இருந்தால் தகுந்த மருத்துவரை மருந்துகளின் அளவைக் குறைக்கலாம் அல்லது மருந்துகள் தேவையில்லாத பட்சத்தில் முழுவதுமாக நிறுத்தலாம்.
3. பிரித்துப் பிரித்து சாப்பிடுங்கள்: ஒரே சமயத்தில் வயிறு நிறைய உண்பது ஒரு வித மயக்கத்தைத் தரும். உணவை பிரித்து, சிறிய இடைவெளிகளில் உண்ணவும். இது மயக்கத்தையும் மந்த நிலையையும் தடுக்கும்.
4. நிறைய தண்ணீர் குடிக்கவும்: நீரிழப்பு இரத்த அழுத்தத்தில் மாறுபாடுகளை உண்டாக்கும். பகலில் போதுமான தண்ணீர் குடிக்கவும். உடலில் நீரின் அளவு குறையும்போது படுக்கையில் இருந்து எழுந்ததும் தலைச்சுற்றல் வருகிறது.
5. உடற்பயிற்சி: தலைச்சுற்றலைத் தடுக்க உடற்பயிற்சி செய்வது மற்றொரு வழியாகும். உடற்பயிற்சி உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவுகிறது. ஆனால், எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. சிறிது நேரம் உடலை வார்ம் அப் செய்த பின் உடற்பயிற்சி செய்யலாம்.
6. குடையும், நீரும் கொண்டு செல்லுங்கள்: வேலை செய்யும்போது நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்கவும். கடுமையான வெயிலில் வெளியே செல்லக் கூடாது. இதமான வெயிலில் சென்றாலும் குடை பிடித்துப்போவது நல்லது. கையில் தண்ணீர் பாட்டில் எப்போதும் வைத்திருப்பது அவசியம்.