
நம் உடல் ஆரோக்கியத்தின் அடித்தளம் நாம் உண்ணும் உணவு தான் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், உணவையே மருந்தாகப் பார்த்தார்கள். அதிலும் குறிப்பாக, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் உட்கொள்ளும் முதல் உணவு, நாள் முழுவதும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிக முக்கியமானது.
காலை வேளையில் இயற்கை உணவுகளை உட்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இதற்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். குறிப்பாக வெந்தயத்தை நெய்யில் வறுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நீங்களே வியக்கும் பலன்களை பெறலாம்.
வெந்தயம், நார்ச்சத்துக்களின் பொக்கிஷம். இது குடல் இயக்கத்தை சீராக்கி, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நெய்யில் வறுக்கும்போது, வெந்தயத்தின் ஜீரணத் திறன் இன்னும் அதிகமாகும். சமீபத்திய ஆய்வுகள் கூட வெந்தயம் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை குடலில் வளர்ப்பதாக கூறுகின்றன. இதனால் மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
உடல் எடையை குறைக்க வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. நெய்யில் வறுத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். இதனால் உடல் எடை குறையும், உடல் பருமன் கட்டுக்குள் வரும். மேலும், வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இது புரதம் மற்றும் கால்சியத்தை உடலுக்கு அளித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும்.
வெந்தயம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், இரத்தத்தில் குளுக்கோஸ் கலப்பதை மெதுவாக்கும். வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் உடலில் முழுமையாக சேர நெய் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சாப்பிடுவது, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க மிகவும் நல்லது.
வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம். இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து மூட்டு வலியை போக்கும். வெந்தயம், எலும்புகளுக்கு இடையில் இருக்கும் ஜவ்வுகளுக்கு உராய்வுத் தடுப்பானாக செயல்படுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
நெய்யில் வறுத்த வெந்தயத்தை பொடி செய்து, வெதுவெதுப்பான பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் மேம்படும். வெந்தயம் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
எனவே, நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் உள்ள வெந்தயத்தையும், நெய்யையும் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.