மார்கழி, தை போன்ற மாதங்களில் உடல் அதிக அளவு குளிரையும் பனியையும் எதிர்கொள்ள நேரிடும். இதனால் கண்கள் வறண்டு எரிச்சல் அடையத் தொடங்கும். கண்கள் வறண்டு போவதைத் தடுக்க உதவும் உணவுகளையும், வழிமுறைகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கண்களின் வறட்சியைப் போக்க உதவும் உணவுகள்:
கீரை வகைகள்: அதிக ஊட்டச்சத்து மிகுந்த கீரைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இலைக்கீரைகளான முட்டைக்கோஸ் புராக்கோலி போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கும். ஆரோக்கியமான பார்வையை பராமரிக்க உதவும்.
பருப்புகள் மற்றும் விதைகள்: அக்ரூட் பருப்புகள், பாதாம் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. வைட்டமின் ஈ என்பது ஒரு ஆக்ஸிஜனேற்றி ஆகும். இது கண் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. கண்ணீர் உற்பத்தியை ஆதரிக்கிறது. கண்கள் வறண்டு போவதைத் தடுத்து கண்ணீர் உற்பத்தியை ஆதரிக்கிறது.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள்: ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி, கிவி, தக்காளி மற்றும் மணத்தக்காளி கீரையின் பழங்கள் இவற்றில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியமாக கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. கண்களில் கொலாஜன் உருவாவதில் பங்கு வகிக்கிறது. எனவே, கண்கள் ஈரப்பதத்துடன் விளங்கும். கண்கள் வறண்டு போவதைத் தடுத்து எரிச்சலில் இருந்து காக்கிறது.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்: கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் போன்றவற்றில் துத்தநாகம் மற்றும் ஃபோலேட் சத்து நிறைந்துள்ளது. இவை இரண்டும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். துத்தநாகம் விழித்திரைக்கு வைட்டமின் ஏயைக் கொண்டு செல்ல உதவுகிறது. இது ஆரோக்கியமான பார்வையை பராமரிக்க உதவுகிறது.
நீரேற்றம்: கண்கள் ஈரப்பதத்துடன் இருந்தால்தான் வறண்டு போகாமல் இருக்கும். அதற்கு உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதைக் குறைத்து விடுவோம். அப்படி இல்லாமல் உடலுக்கு தேவையான தண்ணீரின் அளவை குறைக்காமல் குடித்து வரும்போது அது உடலையும் கண்களையும் ஈரப்பதத்துடன் வைக்கிறது.
வறண்ட கண்களை குளிர்விக்க உதவும் வழிமுறைகள்: கணினி பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து திரையை பார்த்துக் கொண்டிருக்காமல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். உள்ளங்கைகளை நன்றாக சூடு பறக்கத் தேய்த்து கண்களின் மேல் வைத்து எடுக்கும்போது அது ஒரு இதமான அழுத்தத்தைத் தரும். கண்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
கண்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பயன்படுத்தும் தலையணை உறைகளை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அது கண்களில் அழுக்கு, குப்பை சேராமல் தடுக்கும்.
செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக செல்போன் பயன்படுத்தும்போது அது கண் வறட்சியைத் தூண்டும். எனவே, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும். அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொள்ள வேண்டும்.
செயற்கை கண்ணீரை பயன்படுத்தலாம். கண்கள் மிகவும் வறண்டு விடும்போது மருத்துவரின் பரிந்துரையின்பேரில் ஆர்டிபிசியல் டியர்ஸ் எனப்படும் செயற்கைக் கண்ணீரை பயன்படுத்த வேண்டும். இது கண் வறட்சியை தடுக்க உதவும்.