படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல் என்பது பல ஆரோக்கிய நலன்களை வழங்கும் எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த உடற்பயிற்சியாகும். படிக்கட்டுகளை உபயோகிப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இருதய ஆரோக்கியம்: படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இது இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக பாய உதவுகிறது. ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துகிறது. படிக்கட்டுகளை உபயோகிப்பவர்கள் இருதய நோய்களின் அபாயத்திலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் ஏழு நிமிடம் படிக்கட்டுகளில் ஏறுவது மாரடைப்பு வரும் அபாயத்தை பாதியாகக் குறைக்கிறது.
நீரிழிவு நோயின் அபாயம் குறைதல்: உயர் இரத்த அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
கலோரிகளை எரித்தல்: ஜாகிங் செய்வதை விட படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் வேகமாக கலோரிகளை எரிக்கிறது. ஒரு நிமிடம் படிக்கட்டுகளில் ஏறும்போது ஐந்து முதல் 11 கலோரிகளை எரிக்கலாம். இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, லிஃப்டில் செல்வதை விட ஏழு மடங்கு அதிக ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது: படிக்கட்டுகளில் ஏறுவது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு சிறந்த மருந்தாகும். அலுவலகப் பணியில் மனம் சோர்ந்து அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது படிகளில் ஏறி இறங்குவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடலை உற்சாகமாகவும் விழிப்புணர்வுடனும் வைத்திருக்கும்.
தசை வலிமை, மூட்டு நெகிழ்வுத் தன்மை மேம்படுதல்: படிகளில் ஏறும்போது கால்கள், வயிறு, முதுகு மற்றும் கைகளில் உள்ள தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், படிக்கட்டுகளில் ஏறுவதற்கு இடுப்பு மற்றும் முழங்கால் போன்ற மூட்டுகளில் அசைவு தேவைப்படுவதால் அது நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. ஒருவர் தனது எடையை தாங்கிக் கொண்டு படிகளில் ஏறும்போது அது எலும்புகளை வலுப்படுத்தும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களை இது தவிர்க்க உதவும். தொடை எலும்புகள் காஃப் மஸில் போன்றவையும் வலிமை அடைகின்றன.
இயற்கையான உடற்பயிற்சி: இது ஒரு இயற்கையான உடற்பயிற்சியாகத் திகழ்கிறது. இரத்த ஓட்டம் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலம் நாள் முழுவதும் ஒருவரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஜிம் அல்லது உடற்பயிற்சி உபகரணங்கள் போன்ற எந்த செலவும் இல்லாத இயற்கையான உடற்பயிற்சியாகும். இது நீண்ட ஆயுளையும் தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எண்டோர்ஃபின் வெளிப்பாடு: நரம்பியக் கடத்திகள் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு உணர்வுகளை ஊக்குவிக்கின்றன. படிகளில் ஏறி இறங்கும்போது உடல் தன்னிச்சையாக மகிழ்ச்சியாக இருக்க உதவும் எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. இது மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது. கவலையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
யாரெல்லாம் படிக்கட்டுகளில் ஏறி இறங்கக் கூடாது?
இருதய நோயாளிகள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கக் கூடாது. ஏனென்றால் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி சிக்கலில் முடியும். முழங்கால் அல்லது மூட்டு பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் படிகளை உபயோகிக்கக் கூடாது. இது பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி மற்றும் அசௌகரியத்தை அதிகரிக்கும். சுவாசக் கோளாறு, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் உள்ளவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படும். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், குறிப்பாக இடுப்பு அல்லது முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் படிகளில் ஏறி இறங்க கூடாது. அதேபோல வயதான பெரியவர்களும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கக் கூடாது.