ஓய்வின்றி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல் நலத்திலும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியத்துடன் வாழ முடியும். எந்த வயது பெண்களாக இருந்தாலும் இந்த டிப்ஸ்களை கடைபிடித்தால் ஆரோக்கியம் உறுதி.
1. உடற்பயிற்சி மூலம் சிறந்த உடற்கட்டுடன், சிறந்த உடல் நலனையும் பெறலாம். ஆகவே, நேரமில்லை என்று சொல்லாமல் 5 நிமிடங்கள் என்றாலும் கூட அந்த நேரத்தை ஒதுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2. உடலுக்கு அசைவுகள் இருந்தால்தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும். தூங்கும் நேரம் தவிர குறைவாக அமர்ந்து, அதிகமாக நின்று, அறைக்குள்ளே சிறிது நடை போட்டு என்று உடலுக்கு அசைவு தர வேண்டும்.
3. மின் தூக்கி இருக்கும் இடங்களில் மேல் ஏறி செல்வதற்கு படிகளை பயன்படுத்தினால் அது கால்களுக்கு வலிமை தந்து இரத்த ஓட்டம் சீராக அருமையான பயிற்சி ஆகும்.
4. நாற்காலியில் அமர்ந்தும் எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம். கீழே குனிந்து நிமிர்வது, கால்களை வலது, இடமாக கால் பாதங்களை அசைப்பது போன்றவற்றை செய்வது நல்லது.
5. அடுத்தத் தெருவில் உள்ள கடைக்குச் செல்ல இருசக்கர வாகனத்தை நாடாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு என்று நினைத்து தயவு செய்து காலார நடந்து பாருங்கள். நெடுந்தூரம் இருக்கும் இடத்திற்கு வண்டியில் சென்றால் கூட சற்று முன்பாகவே வண்டியை நிறுத்தி நடந்து செல்லுங்கள்.
6. வயதுக்கு ஏற்றவாறு எளிய யோகா கலைகள் தற்போது உள்ளது. உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்றாலும் யோகா கலைஞரிடம் தகுந்த யோகாவை கற்று செய்யலாம்.
7. உடற்பயிற்சியுடன் நல்ல உணவுக் கட்டுப்பாடும் தேவை. குறைவான கிளைசெமிக் உணவுகள் சீரான குளுக்கோஸ் அளவை உடலுக்கு அளிக்கும். அசைவம் என்றால் மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். சைவம் என்றால் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமில சத்து அதிகம் கொண்ட உணவுகளான பருப்பு, கொட்டை வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
8. பழங்களை உட்கொள்வது சீரான குளுக்கோசை அளிக்கும். வாழைப்பழம், ஆப்பிள், செர்ரி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை உலர்ந்த பழங்களை தவிர்த்து விடுவது நல்லது.
9. போதிய தூக்கம் அவசியம் தேவை. களைப்பாக இருக்கும் உங்கள் மூளை செல்களால் குளுக்கோசை உறிஞ்சிக்கொள்ள முடியாது . குளுக்கோசை தரும் பலனற்ற உணவுகளை உட்கொள்ளத் தூண்டும். இது நல்லதல்ல. ஆகவே, தூக்கத்தில் கவனம் அவசியம் தேவை.
10. சராசரியாக 8 மணி நேரம் தொடர்ந்து உறங்குவது நல்லது. ஏழு மணி நேரம் இரவில் உறங்கி விட்டு மதியம் ஒரு மணி நேரம் உறங்குவதும் உடலுக்கு நல்லது என்று ஒரு ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11. வைட்டமின்களில் மிக எளிதாக கிடைப்பது வைட்டமின் டி. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் வயதாகும்போது பாதிப்பு அடையும் பற்களுக்கும் எலும்புகளுக்கும் உதவும் வைட்டமின் டியை வெயிலில் 15 நிமிடம் நின்று பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியம்.
12. கடந்த காலம், எதிர்காலம் குறித்த சிந்தனைகள் விடுத்து மனதில் பதற்றமின்றி அமைதியாக வாழ்வது ஆரோக்கியம் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.