ஹார்மோன்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு செயல்படும் இரசாயனங்களாக நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்பட்டு உடல் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த சுரப்பிகள் பல உடலியல் செயல்பாடுகளையும் உளவியல் ஆரோக்கியத்தையும் கட்டுப்படுத்துவதில் முதன்மையானது.
கவலை, கோபம், பயம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் நோய் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்வதிலும் ஹார்மோன்களின் செயல்பாடு அடங்கியுள்ளது.
பெப்டைட் ஹார்மோன்கள் மற்றும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் என இரு வகைகளாக உள்ள ஹார்மோன்கள் சுரப்பு குறைந்தால் பலவித உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவோம். குறிப்பாக. ஹார்மோன் சமநிலையின்மையால் நீரிழிவு பாதிப்பு, ஆஸ்டியோபோரோசிஸ், ஹைப்பர் தைராய்டிசம் போன்ற பாதிப்புகள் உருவாகும்.
நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் ஹார்மோன் ஆரோக்கியத்தில் அடிப்படை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வளர்சிதை மாற்றம் முதல் மனநிலை வரை அனைத்தையும் ஒழுங்குபடுத்தி நல்வாழ்வு தரும் ஹார்மோன்கள் சமநிலையில் இருப்பது அவசியம். சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நமது நாளமில்லா அமைப்பை வளர்த்து, சமநிலையை மீட்டெடுக்கலாம்.
ஹார்மோன் சமநிலை என்பது உணவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் அடங்கும். இது நாளமில்லா சுரப்பிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கிறது. உதாரணமாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகின்றன. அதேநேரத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கும். இது பெண்களில் ஹார்மோன் அளவை சீர்படுத்தும்.
முட்டைகள் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமான கொழுப்பு மற்றும் புரதங்களின் நல்ல சமநிலையை வழங்குகிறது. கொட்டைகள் (குறிப்பாக பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள்) ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை ஹார்மோன் சமநிலையைத் தருகிறது.
தேங்காய் எண்ணெயில் ட்ரைகிளிசரைடுகள் (MCTகள்) உள்ளன. வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவி மன அழுத்த ஹார்மோன்களை சமன் செய்ய உதவும்.
குர்குமின் கொண்ட மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்காக அறியப்படும். இது வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையைத் தருகிறது. குடல் ஆரோக்கியம் ஹார்மோன் ஒழுங்குமுறையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், குடல் நுண்ணுயிர் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிறந்து உடலின் திறனை மேம்படுத்த உதவுகிறது.
தயிர், யோகர்ட் போன்ற புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள் மற்றும் இலை, கீரைகள் மற்றும் பெர்ரி போன்ற ப்ரீபயாடிக் நிறைந்த உணவுகள் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கி குடலின் ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. இவை மட்டுமல்ல, டார்க் சாக்லேட், ஆப்பிள், புரோக்கோலி, அவகோடா, ஓட்ஸ், பெர்ரி, தேயிலை, சால்மன் மீன், ஆளி விதைகள் உள்ளிட்ட பல உணவுகளை மருத்துவ ஆலோசனை கீழ் நமது ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்து ஆரோக்கியம் பெறலாம்.