
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. பசிக்கும்போது அல்லது சுவைக்காக எதை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், இரவு நேரத்தில் நாம் உட்கொள்ளும் சில உணவுகள் நம் உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீமையையே விளைவிக்கின்றன. இரவு உணவை சரியாக தேர்ந்தெடுக்காதபோது, அது தூக்கத்தை கெடுத்து விடுகிறது.
இரவில் சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும்போது வயிறு பாரமாவதுடன், கேஸ் மற்றும் அசிடிட்டி போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும், சில உணவுகள் நம் மூளையை அதிக அளவில் சுறுசுறுப்படையச் செய்து, தூக்கத்தை (Sleep) வரவிடாமல் தடுத்து விடுகின்றன. இதனால் இரவு முழுக்க தூக்கம் பாதியிலேயே கலைந்து, காலையில் எழும்போது உடல் சோர்வும், மன அழுத்தமும் மட்டுமே எஞ்சியிருக்கும். அந்த வகையில், இரவு நேரத்தில் நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய அந்த 7 முக்கிய உணவுகள் பற்றி இந்தப் அப்பதிவில் காணலாம்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான சத்துக்கள் இருந்தாலும், இதை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றில் அமிலத்தன்மையை தூண்டி நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நீங்கள் படுக்கும்போது இந்த அமிலம் உணவுப்பாதை வழியே மேலே வருவதால், தூக்கம் முற்றிலும் பாதிக்கப்படும்.
தக்காளியில் 'டைரமின்' என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மூளையை தூண்டி, அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் ஒரு ரசாயனத்தை உடலில் சுரக்க வைக்கிறது. இதனால் மூளை தூங்காமல் விழித்துக் கொண்டே இருக்கும். மேலும், தக்காளியும் அமிலத்தன்மை நிறைந்தது என்பதால் இரவில் செரிமான கோளாறுகளை உண்டாக்கும்.
இவை இரண்டுமே உடலுக்கு மிகச்சிறந்த சத்துக்களை வழங்கும் காய்கறிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இவற்றில் ஜீரணிக்க கடினமான கரையாத நார்சத்து அதிக அளவில் உள்ளன. இரவு நேரத்தில் நம்முடைய செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும். அப்போது இவற்றை சாப்பிட்டால், வயிறு உப்பசம் மற்றும் கேஸ் தொல்லை ஏற்பட்டு நிம்மதியான தூக்கம் தடைபடும்.
டார்க் சாக்லேட் இதயத்திற்கு நல்லது என்றாலும், இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் இயற்கையாகவே 'காஃபின்' மற்றும் 'தியோப்ரோமைன்' ஆகிய தூண்டுதல்கள் நிறைந்துள்ளன. இவை இதயத் துடிப்பை லேசாக அதிகரித்து, நரம்பு மண்டலத்தை விழிப்புடன் வைத்திருக்கும். இதனால் உங்களுக்கு சீக்கிரமாக தூக்கம் வராது.
நட்ஸ் வகைகள் உடலுக்கு நல்ல கொழுப்பை தந்தாலும், இரவில் இவற்றை அதிகமாக சாப்பிடுவது தவறு. பாதாம் மற்றும் முந்திரியில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன. இரவு நேரத்தில் இந்த கனமான சத்துக்களை உடைத்து ஜீரணிக்க நம் வயிறு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உடலுக்கு தேவையான முழுமையான ஓய்வு கிடைக்காமல் போகும்.
ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவ அறிவியல் இரண்டுமே இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்குமாறு பரிந்துரைக்கின்றன. தயிர் இயற்கையிலேயே உடலுக்கு குளிர்ச்சியை தந்தாலும், அது உடலில் கபத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் இரவில் மூக்கடைப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். மேலும், செரிமானம் ஆகவும் நீண்ட நேரமாகும்.
மசாலாக்கள் மற்றும் காரம் நிறைந்த உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கின்றன. தடையற்ற ஆழமான தூக்கத்திற்கு நம் உடலின் வெப்பநிலை சற்று குறைய வேண்டும். ஆனால், காரமான உணவுகள் உடலை சூடாக்குவதுடன், கடுமையான நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கி இரவு முழுவதையும் அவஸ்தையாக மாற்றிவிடும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)