மருத்துவர்களின் எதிரி என்று சொல்லுமளவிற்கு மகத்தான மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது நிலக்கடலை. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்ட இதன் பலன்களை அறிந்து அளவோடு இதைப் பயன்படுத்தினால் ஏராளமான உடல் நல பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்த நிலக்கடலையில் உள்ள அதிக சத்துக்களால் இதுவும் கொட்டை வகை தானியங்களில் ஒன்றாகிறது. இதன் தாய்வீடான பிரேசிலிலிருந்து போர்ச்சுகீசியர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இதை எடுத்துச் சென்றதன் மூலம் உலகத்தில் பரவத் தொடங்கியது. பூமிக்கடியில் வேர்விட்டு வெளியே இலை விடுகிற தாவரம் வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் முற்றி காய் கிடைக்கிறது.
இதில் போலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் குழந்தைப் பேற்றுக்கு முயற்சிக்கும் தம்பதிகள், கர்ப்பிணிகள் இந்த வேர்க்கடலையை சாப்பிடலாம். இது குழந்தைக்கு பிறவி குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும், நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் போன்றவற்றை தடுத்து குழந்தைப் பேறு உண்டாகும் வாய்ப்பு உண்டாகும்.
வேர்க்கடலை பயிர்கள் உள்ள இடத்தில் அதிகமிருக்கும் எலிகள் வேர்க்கடலை பயிரை பூமியில் இருந்து தோண்டி எடுத்து உண்ணும். இதனால் பெருகும் அதன் குட்டிகள் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதே வேர்க்கடலையின் சத்துக்கு சான்று என்ற கருத்தும் உண்டு.
புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய சத்துக்கள் கொண்ட இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும், சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் இது விளங்குகிறது. வேர்க்கடலையை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.
மாமிசம், முட்டை, காய்கறிகளை விட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம் என்பது சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற பாதிப்புகள் குறையும். மேலும், நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமை கொண்டது நிலக்கடலை.
இதிலுள்ள மாங்கனீஸ் சத்து மற்றும் கொழுப்புகள் உடல் நல மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக, இதிலுள்ள கால்சியம் பெண்கள் நலனைக் காக்கிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வலுவான எலும்புகளைப் பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.
நீரிழிவு நோய் மற்றும் இதய பாதிப்பை தடுக்கும் நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். இளமைத் தோற்றம், நினைவுத்திறன், உடல் எடை பராமரிப்பு, சருமப்பொலிவு , இதய ஆரோக்கியம் என எண்ணற்ற பலன்களைத் தரும் நிலக்கடலையை தவறாமல் நம் உணவில் சேர்த்து பலனடைவோம்.